நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பாஜக 340க்கும் மேலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் பாஜக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் சூழ்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் சாதனையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முறியடித்துள்ளார்.
குஜராத் காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சவுதாவை விட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 2014 தேர்தலில் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அத்வானி 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், 2019 தேர்தலில் அத்வானியின் சாதனையை அமித் ஷா முறியடித்துள்ளார்.