'கர்நாடகாவின் சிங்கம்' என பெயர் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2019 12:54 pm
singham-of-karnataka-police-resigns-says-hasn-t-decided-on-politics

'கர்நாடக சிங்கம்' என பெயர் பெற்ற பெங்களூர் நகர துணை ஆணையர் அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளது கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு நகரின் துணை ஆணையராக இருந்து வந்த ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தைச் சேர்ந்தவர். நேர்மையின் மறுவுருவம், கர்நாடக சிங்கம் என பெங்களூரு மக்கள் இவருக்கு சிறப்பு பெயர்களை சூட்டியுள்ளனர். பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு வெற்றி பெற்றவர். பெங்களூருவில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தவர். மேலும் பெங்களூரு மக்களின் நன்மதிப்பை பெற்றிருப்பவர். 

இவர் பணிச்சுமை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் சிறிது காலம் எனது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். எனது வீட்டில் உள்ள கால்நடைகளை கவனித்துக்கொள்ளப் போகிறேன். நான் பணியில் இருந்த காலத்தில் என்னால் முடிந்தளவு மக்களுக்கு நல்லது செய்தேன். இனியும் செய்வேன். எனது பணிக்காலத்தில் நான் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால், வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் முடிவு கர்நாடக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் எனது நலம் விரும்பிகளுடன், தீர ஆலோசித்து தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன், மேலும் பணிக்காலத்தில் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார். 

இவர் கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி என்று கிராமத்தை சேர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பின்னர் எம்.பி.ஏ படித்த இவர் கடந்த 2011ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் ஆனார். உடுப்பி எஸ்.பியாக இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததற்காக இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவரை இடமாற்றம் செய்யக்கூடாது என உடுப்பி மக்கள் போராடியதாக தகவல் உள்ளது. அப்பேற்பட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற அதிகாரி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இதுதொடர்பாக பேசிய இவரது நண்பர்கள், அண்ணாமலை விரைவில் அரசியலில் ஈடுபட போகிறார் என்றும் அதற்காகவே பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close