உ.பி.யில் கடும் வெப்பம்: காசிக்குச் சென்ற 5 தமிழர்கள் ரயில் பயணத்திலே பலி!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 05:05 pm
extreme-heat-kills-4-passengers-onboard-kerala-express-one-hospitalised-in-up-s-jhansi

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெப்பநிலையை தாங்க முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலாத் தலம் சென்றுள்ளனர். காசி, கயா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர்கள் இன்று உத்தரப்பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பு பெட்டியில் பயணம் செய்தனர். ரயில் ஜான்சி பகுதிக்கு வரும்போது, அவர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முன்னரே, ரயிலிலே வைத்து 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த பச்சையா, பாலகிருஷ்ணன், தெய்வானை, கலாதேவி, சுப்பையா ஆகிய 5 பேரும் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 

இவர்களது உடல்கள் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் பகல் நேரங்களில் வீட்டிற்கு வெளியே வரவேண்டாம் என்றும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி வானிலை மையம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் தான் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், உத்தரபிரதேச மாநிலத்தில் 48 டிகிரி வெப்பநிலையும் நேற்று பதிவாகியுள்ளது. வெப்பநிலை தாங்க முடியாமல் தான் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தெரிய வரும். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close