52  எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2019 09:15 pm
hope-you-go-higher-pm-modi-s-takedown-of-gandhis-in-parliament

ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்கள் நலனைப் பற்றி கருத்தில் கொள்ளாததால் தான் தற்போது, காங்கிரஸ் 52  எம்.பி.க்களை பெற்றுள்ளது. அக்கட்சி இப்படியே மேன்மேலும் வளரும் என நம்புகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் காங்கிரஸை நையாண்டி செய்து பேசினார். அப்போது, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின் , தற்போது முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கூட்டத்தொடர் தொடங்குவதன் அடையாளமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 20) உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:

காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம், அக்கட்சியும் சரி, அதன் தலைவர்களும் சரி...தாங்கள் இவ்வளவு உயரத்துக்கு வந்ததற்கு காரணம் மக்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மிதப்பில் இருந்ததன் விளைவை அவர்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.  தற்போது 52 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ள அக்கட்சி, இதே போக்கில் மேன்மேலும் வளரும் என நம்புகிறேன்.

பொதுமக்களை விட்டு விடுவோம். நேரு, இந்திரா காந்தி குடும்பத்தை சாராத தங்கள் கட்சியினருக்குகூட காங்கிரஸ் உரிய அங்கீகாரம் அளித்ததில்லை. மன்மோகன் சிங் போன்றவர்களே இதற்கு உதாரணம்.

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை பற்றி இன்றும் பேசும் மக்கள், 2004 -2014 -ஆம் ஆண்டு வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பற்றி பெயரளவுக்கு கூட பெருமையாக பேசுவதில்லை. அந்த அளவுக்கு காங்கிரஸ் சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளது. இதுகுறித்து இந்த சபையில் விவாதம் நடத்த காங்கிரஸ் தயாரா? இதனை ஒரு சவாலாக ஏற்க அக்கட்சி தயாரா?

ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியில் சிலரது உழைப்பு மற்றும் பங்களிப்பு மட்டும் இருப்பதாக சிலர் கருதுகின்றனர். அவர்கள் நினைக்கும் அத்தகையோரின் பெயரை மட்டுமே உரக்க உச்சரிக்கின்றனர்.  தேசத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மற்றவர்களின் பெயர்களை எல்லாம் அவர்கள் மிக எளிதாக மறந்துவிடுகின்றனர்.

ஆனால், எங்களின் சிந்தனை முற்றிலும் மாறுப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் பங்களிப்பாற்றுகிறான் என நாங்கள் எண்ணுகிறோம். மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் கரங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதே எங்களின் நோக்கம். 

அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை. இன்னொரு முறை அதுபோன்றதொரு கொடுமை நிகழக்கூடாது. அவசர நிலை பிரகடனத்தின்போது தேசத்தின் ஆன்மாவே சிதைக்கப்பட்டது. அதனால் தேசத்துக்கு ஏற்பட்ட வலி என்றுமே மறக்க முடியாதது என்று பிரதமர் நரேந்திர  மோடி பேசினார்.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close