ஆதரவு 99... எதிர்ப்பு 84... முத்தலாக் தடை மசோதா  மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

  கிரிதரன்   | Last Modified : 30 Jul, 2019 10:14 pm
rajya-sabha-passes-muslim-women-protection-of-rights-on-marriage-bill-2019

முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக, மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து, மாநிலங்களவையிலும் இம்மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

முத்தலாக்  தடை மசோதா, மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையில் இம்மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக, மாநிலங்களவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர்.

தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளின்  உறுப்பினர்கள் அவைக்கே வராத நிலையில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விவாதத்தின்போது வலியுறுத்தினர்.

இதையடுத்து, இம்மசோதாவை தேர்வு குழுவின்  பரிசீலனைக்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இவ்வாக்கெடுப்பில், முத்தலாக் தடை மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப 84 பேர் ஆதராகவும், 99 எம்.பி.,க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.

அதாவது முத்தலாக் தடை மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பாமலேயே, மாநிலங்களவையில் நிறைவேற்ற ஆதரவாக 99 பேரும், இதனை எதிர்த்து 84 எம்.பி.,க்களும் வாக்களித்தனர். இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின் மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை சட்ட  மசோதா இன்று நிறைவேறியுள்ளது.

தலாக் முறையின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு உடனடியாக விவகாரத்து வழங்குவதை கிரிமினல் குற்றமாக கருத, இம்மசோதா வகை செய்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் எவ்வளவோ மசோதாக்களை இதுவரை  நிறைவேற்றியிருந்தாலும், முஸ்லிம் சமூகத்தினர் தொடர்பான முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்த அரசின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close