அயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்!

  முத்துமாரி   | Last Modified : 07 Aug, 2019 05:54 pm
sushma-swaraj-life-history-and-achievements

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழக்கையில் மக்கள் பணியாற்றி, இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாட்டு மக்கள் மனதிலும் இடம்பிடித்தவர். பெண் ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது அரசியல் வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் சுருக்கமாக..

1953ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் அங்கே முடித்துவிட்டு, சண்டிகர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். 1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். தனது கல்லூரி பருவத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் பணியாற்றினார். 

அரசியல் பயணத்தில் அவரது முதல் அடியே சாதனையானது. 1977ம் ஆண்டு ஜனதா கட்சியில் இருந்து ஹரியானா மாநிலம் அம்பாலா கண்டோன்மெண்ட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டு, 1977-82 காலகட்டத்தில், ஹரியானாவில் தேவிலால் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 25. மிக இளம் வயதிலே அமைச்சர் பதவியை பெற்று சாதனை நிகழ்த்தினார். 

1979ல் மாநில ஜனதா கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 1987-90 காலகட்டத்தில் ஹரியானாவில் தேவிலால் கூட்டணி ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். 

1990-96 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர், வாஜ்பாயின் அமைச்சரவையில் 1996 - 97, 1998-2000ம் காலகட்டங்களில் தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 2003-04ல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். வாஜ்பாயுடன் சிறந்த நட்புறவு கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர். 

1998 அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் டெல்லியின் ஐந்தாவது முதல்வராக பதவி வகித்த அவர், அம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்தவர். ஏழு முறை மக்களவை எம்.பியாகவும், மூன்று முறை சட்டமன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டவர். 

2009-14 காலகட்டத்தில் மக்களவை எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்த அவர், 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். வெளியுறவுத்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சாதனைகளை புரிந்தவர். இந்திரா காந்திக்குப் பின்னர் வெளியுறவுத்துறையை நிர்வகித்த இரண்டாவது பெண் மற்றும் பிரதமர் அல்லாத முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக இவர் ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்காதவை. நீங்கள் செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டாலும் எனக்கு தகவல் தெரிவியுங்கள்; உதவுகிறேன் என்று கூறியவர். 

இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது கடந்த ஆண்டு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அப்போது இந்தியா முழுவதுமுள்ள சாதாரண மக்கள் பலர் தங்களது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தனர். அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அவர் பெரும்பாலாக காட்டன் புடவைகளையே விரும்புவதால், அவர் செல்லும் இடத்திலுள்ள மக்கள் அவருக்கு காட்டன் ஆடைகளை பரிசாக கொடுப்பர். அவ்வாறு 10,000க்கும் மேற்பட்ட காட்டன் புடவைகளை அவர் சாமானிய மக்களிடம் இருந்து பெற்றுள்ளார். 

வெளிநாட்டு நட்புறவில் பிரதமர் மோடி தற்போது சிறந்துவிளங்க காரணம் என்று இருவரை நாம் கூறலாம். அவர்கள் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் இந்நாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர். இந்திய பிரதமர்கள் இதுவரை போகாத நாடுகளுக்கு பிரதமரை பயணிக்க வைத்த பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள். 

சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற போது, சுஷ்மா ஸ்வராஜ் தான் எனக்கு முன்மாதிரி. வெளியுறவுத்துறையை அவர் எவ்வாறு கையாண்டரோ அவ்வாறே தானும் கையாள்வேன் என்று ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார். 

மேலும், கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடந்த இஸ்லாமிய கார்ப்பரேஷன் அமைப்பில்(OCI) இந்தியாவின் பிரதிநிதியாக முதல்முறையாக உரையாற்றி சாதனை நிகழ்த்தினார். 

தனது உடல்நிலையை காரணம் காட்டி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்ததுடன், அரசியலில் இருந்து விடுபட்டார். வெளியுறவுத்துறையில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட ஒரு தலைவரை இந்நாடு இன்று இழந்துள்ளது. பெண் ஆளுமைகளில் போற்றப்படும் தலைவர்; நாட்டின் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். மனிதநேயம் மிக்க தலைவர்; மக்களின் தலைவர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார். சுஷ்மாவிடம் பேச வேண்டுமெனில் ஒரு ட்வீட் செய்தாலே போதும் என்ற அளவுக்கு மக்களிடம் எளிமையானவர். 

"இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் அரசியல்வாதி" என்று அமெரிக்காவில் வெளியாகும் The Wall Street Journal பத்திரிக்கை 2017ல் இவரைத் தேர்ந்தெடுத்தது.

இன்று அவரது மறைவுக்கு பாகிஸ்தானியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததே, உலக மக்களிடையே அவர் ஆற்றிய மக்கள் பணியை பறைசாற்றும்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close