பனிச்சரிவுகள், அண்டை நாட்டு ராணுவ வீரர்களின் அத்துமீறல்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் என எது நேர்ந்தாலும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்படுமாறு லைன் ஆப் கண்ட்ரோலில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ படையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் வடக்கு ராணுவ தளபதி ஜெனரல் ரன்பீர் சிங்.
இந்தியாவின் அண்டை நாடுகளின் ராணுவ தளங்கள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாத அத்துமீறல்களும், தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, இந்திய பாதுகாப்பு படைகளும் பலப்படுத்தப்பட வேண்டும் என்கிற நிலையில், இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான லைன் ஆப் கண்ட்ரோலில் அதிகரித்து நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்களை கண்டு உரையாற்றினார் வடக்கு ராணுவ படை தளபதி ஜெனரல் ரன்பீர் சிங்.
அந்த உரையாடலின் போது, "தற்போது நின்று கொண்டிருப்பது ஆபத்தான பகுதிதான், பனிச்சரிவுகளும் இயற்கை சீற்றங்களும் அதிகம் காணப்படும் பகுதி இது. பயங்கரவாத தாக்குதல்களும் அத்துமீறல்களும் எந்த நொடியிலும் மேற்கொள்ளப்படலாம். எனினும் எப்போதும் விழிப்புடனும், எச்சரிக்கையடனும் செயல்படுவது அவசியம்" என்று கூறியுள்ளார் ரன்பீர் சிங்.
நமக்கு எதிராக நிற்பவர்களுக்கு சாதகமான நிலை ஒரு நிமிடம் கூட ஏற்படாத வகையில் கையாள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்திய பாதுகாப்பிற்காக அவர்களை இங்கே அனுப்பியிருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் ரன்பீர் சிங்.
இதை தொடர்ந்து, நேற்று மக்களவையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி, ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு சுமார் 950 அத்துமீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதில் 850க்கும் மேற்பட்ட அத்துமீறல்கள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Newstm.in