மோடியின் மலரும் நினைவுகள்... குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழா படங்கள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 26 Dec, 2017 02:58 pm

குஜராத் முதல்வராக இன்று விஜய் ரூபானி இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதவி ஏற்பு பிரதமர் மோடிக்கு, குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற தினத்தை நினைவுபடுத்தியதாம். பதவி ஏற்பு விழா மற்றும் மோடியின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா படங்களின் தொகுப்பை காணலாம்.

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பு, காவி நிற கோட் அணிந்து விஜய் ரூபானி இன்று காலை காந்தி நகரில் உள்ள பஞ்சதேவ் மகாதேவ் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு காணிக்கை செலுத்திவிட்டு சென்றார் விஜய் ரூபானி.

பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு விரைந்தார் ரூபானி. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில், பாரத பிரதமரும் குஜராத்தின் பெருமையுமான மோடியை வரவேற்ற போது என்று ரூபானி குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் பதவியேற்பு விழா நடக்கும் இடத்துக்கு விரைந்தனர். இந்த பதவி ஏற்பு விழாவில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

மோடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த, சமீபத்தில் லாலுவை கவிழ்த்துவிட்டு பா.ஜ.க கூட்டணில் இணைந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் இந்த விழாவில் கலந்துகொண்டார். தொடர் வெற்றிக்கு அவர் மோடியை வாழ்த்தினார்.

குஜராத்தில் மாநிலங்கள் அவை தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா அக்கட்சியில் இருந்து விலகினார். தன்னுடன் பல எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு சென்று பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், பல எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பக்கம் இழுக்க முயற்சித்தார். அவரிடமிருந்து எம்.எல்.ஏ-க்களைக் காப்பாற்ற கர்நாடகாவுக்கு அழைத்து வந்தது காங்கிரஸ். குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சங்கர் சிங் வகேலாவும் ஒரு வகையில் காரணம். அவரும் ரூபானி பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்தார்.

பதவி ஏற்பு விழாவில் சாதுக்களுக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. அவர்களை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர். புதிய அமைச்சரவைக்கு மோடி தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இவர்கள் தலைமையில் குஜராத் மாநிலம் புதிய உச்சத்தைத் தொடும் என்று அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரூபானி பதவி ஏற்பு விழா நடந்தது. மொத்தம் 19 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களில் 9 பேர் கேபினெட் அமைச்சர்கள். 10 பேர் இணை அமைச்சர்கள் ஆவர்.

இந்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் பிரதமர் மோடிக்கு, தான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற நினைவு வந்துவிட்டது.

ட்விட்டரில், 2001, 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் முதல்வராக அவர் பதவி ஏற்றுக்கொண்ட படங்கள், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்களின் படங்களை மோடி பதிவிட்டுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.