மத்திய மந்திரி நாக்கை வெட்டுவோருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

  Sujatha   | Last Modified : 27 Dec, 2017 07:05 am

மதச்சார்பற்றோர் பற்றி சர்ச்சை கருத்தினை கூறிய மத்திய மந்திரியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.1 கோடி தரப்படும் என கர்நாடக முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் கூறியுள்ளார்.கர்நாடகாவில் இருந்து 5 முறை மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனந்த் குமார் ஹெக்டே (வயது 49). தற்போது மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தில் பிரம்மன் யுவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ஹெக்டே, "இப்போது தங்களை மதசார்பற்றவர்கள் என்று கூறும் புதிய கலாச்சாரம் பிரபலமாகி உள்ளது. நான் ஒரு முஸ்லிமாக இருக்கிறேன் அல்லது நான் ஒரு கிறிஸ்தவன், அல்லது நான் இந்துவாக இருக்கிறேன், என்று யாராவது சொன்னால் அவர்கள் தங்களது வேர்களை அறிந்திருக்கிறார்கள் அதனால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று அழைக்கும் இந்த மக்கள், பெற்றோர் வழி பற்றி அறியாதவர்கள் அல்லது தங்கள் இரத்தத்தை தெரியாதவர்கள் போல் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய அரசியலமைப்பை மாற்றவே பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்தது என்றும் அவர் கூறியுள்ளார். 

சர்ச்சைக்குரிய இந்த கருத்தால் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகி பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான குருஷாந்த் பதிதார், மத்திய மந்திரி ஹெக்டேவின் நாக்கை வெட்டி ஒரு மாதத்திற்குள் (ஜனவரி 26) அதனை கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏனெனில் அவரது கருத்துகள் தலித்துகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மதசார்பற்ற மக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில்  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர்  பக்கத்தில் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது வேதனையளிக்கிறது.

ரத்தம் மனிதனின் ஜாதி, மதத்தை நிர்ணயிக்காது. மதச்சார்பின்மை, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை என்று அர்த்தமில்லை. எல்லா மதத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளுதல் என்று தெரிவித்துள்ளார்.

அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close