கெஜ்ரிவாலின் 'டோர் டெலிவரி' சேவைக்கு முட்டுக்கட்டை போட்ட துணை நிலை ஆளுநர்

  Anish Anto   | Last Modified : 27 Dec, 2017 07:08 am

பிறப்பு சான்றிதழ், லைசென்ஸ் உட்பட அரசு சார்ந்த ஆவணங்களை பொதுமக்களின் வீடுகளுக்கே வந்து வழங்கும் டெல்லி அரசின் புதிய திட்டத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.

கடந்த மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு டோர் டெலிவரி திட்டம் ஒன்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, பிறப்பு சான்றிதழ், சமூக நலத்திட்டங்கள், ஓய்வூதியம் உட்பட 40 திட்டங்கள் சார்ந்த ஆவணங்களை பொது மக்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்கப்படும். இதனால் அரசு அலுவலக வாசலில் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தங்கள் வேலைகளை கவனித்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பட்ட இந்த திட்டத்திற்கு அவர் அனுமதி அளிக்க மறுத்துள்ளார். இதற்கு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை இது ஏற்படுத்தி இருப்பதாக  கூறியுள்ளார். ஆனால் தான் டெல்லி அரசின் திட்டத்தை நிராகரிக்கவில்லை என்றும், புதிய வழிமுறை ஒன்றை பரிந்துரைத்து இருப்பதாகவும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து துணை நிலை ஆளுநர், "தற்போதைய திட்டத்தால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுதல், ஆவணங்கள் தொலைந்து போதல், மோசமான நடவடிக்கை, லஞ்சம் உள்ளிட்ட பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு தான் ஆகும். மேலும், சான்றிதழ் வழங்கும் பணியாளர்களால் டெல்லி சாலையில் நெருக்கடி அதிகரிப்பதோடு மாசுபாடும் அதிகரிக்கும். அரசு 100% டோர் டெலிவரி திட்டத்திற்கு மாற நினைக்கிறது. ஆனால் அரசு பரிந்துரைத்துள்ள 40 திட்டங்களில் 30 திட்டங்கள் ஏற்கனவே இணையதளம் மூலம் கிடைக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள துணை முதல்வர் சிசோடியா, "டோர் டெலிவரி திட்டத்தை துணை நிலை ஆளுநர் நிராகரித்து விட்டார். அதனை மீளாய்வு செய்ய அனுப்பி உள்ளார். டிஜிட்டலைசேஷன் போதும் என அவர் கூறுகிறார். டோர் டெலிவரி தேவை இல்லையாம்.   இணையதளம் மூலம் பல வசதிகள் கிடைத்தாலும், மக்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். டிஜிட்டலைசேஷனை தாண்டி மக்கள் இன்னும் அரசு அலுவலகங்களை சுற்றி ஓடிக் கொண்டு தான் இருக்கின்றனர. கள நிலைமை தெரியாமல் துணைநிலை ஆளுநர் முடிவெடுத்துள்ளார். மக்கள் அனைவராலும் இந்த திட்டம் வரவேற்கப்பட்டது. ஆனால் தற்போது இது அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலத்திட்டம் சார்ந்த விஷயங்களில் கருத்து முரண்பாட்டை தெரிவிக்கவும், அதனை தடுத்து நிறுத்தவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா" என தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலம் போலவே டெல்லியிலும் முதல்வர் - துணை நிலை ஆளுநர் இடையேயான அதிகார மோதலானது நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close