அமலாக்கத்துறையின் திட்டமிட்ட நாடகம்... ப.சிதம்பரம் பேட்டி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Jan, 2018 11:38 pm

அமலாக்கத் துறை டெல்லி மற்றும் சென்னையில் இன்று நடத்திய சோதனை ஒரு திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இன்று ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இது குறித்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, "இந்த வழக்கு தொடர்பாக என் மகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்கும்படி எதிர்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் 30ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இதைத் தொடர்ந்து ஒரு திட்டமிட்ட நாடகம் நடக்கும் என்று எதிர்பார்த்தோம். அது போல அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். 

கார்த்தி சிதம்பரம் மீது இதுவரை சி.பி.ஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பும் திட்டமிட்ட குற்றம் புரிந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அமலாக்கத் துறையினர் இதில் தலையிட்டு ஆய்வு செய்ய எந்த உரிமையும் இல்லை. நான் டெல்லியில் வசிக்கிறேன். என்னுடைய வீட்டில் கார்த்தி சிதம்பரம் வசிப்பதாக அமலாக்கத் துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறி சோதனை நடத்த வந்தனர். 

நடத்திக்கொள்ளுங்கள் ஆனால் என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் என்று அவர்கள் கொண்டுவந்த சர்ச் வாரண்டில் எழுதிக்கொடுத்தேன். அவர்கள் பெட்ரூம், கிச்சன் என எல்லா இடத்திலும் சோதனை நடத்தினர். எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் 2012-13ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் நகல் உள்ளிட்டவற்றை ஒரு கவரில் போட்டு எடுத்துச் சென்றனர். சென்னையிலும் எதையும் கைப்பற்றவில்லை.

சென்னையில் ஏற்கனவே மூன்று முறை சோதனை நடத்தியுள்ளனர். அப்போதும் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. சோதனை முடிந்தபிறகு ஆவணங்களைக் கொண்டுவந்து வைத்துவிடுவோம் என்று நினைத்திருப்பார்கள் போல. சோதனைக்கு வந்த அதிகாரிகள் மரியாதையாக நடந்துகொண்டனர். சோதனை நடத்துவதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அவர்களால் என்ன செய்ய முடியும். அவர்கள் கடமையை அவர்கள் செய்துவிட்டு சென்றனர்" என்றார். 

சோதனை, வழக்கு தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேள்விகேட்க முயன்றனர். ஆனால், பதில் அளிக்க மறுத்து வீட்டுக்குள் சென்றார் ப.சிதம்பரம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close