கண்ணாடி வாங்க ரூ.50,000! அரசு பணத்தில் அனுபவிக்கும் கேரள சபாநாயகர்

  SRK   | Last Modified : 04 Feb, 2018 09:31 pm


கேரள சட்டமன்றத்தின் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், ரூ..50,000 மதிப்பில் மூக்கு கண்ணாடி வாங்கியதாகவும், அதை மருத்துவ செலவு என குறிப்பிட்டு அரசிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏக்கள் மருத்துவ செலவுக்கான சலுகைகளை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என கோரிய விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதில், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், மூக்கு கண்ணாடிக்கு என ரூ.49,900 அரசிடம் இருந்து திரும்பப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடியின் ஃபிரேமுக்கு ரூ.4,900 மற்றும் கண்ணாடியின் லென்ஸுக்கு ரூ.45,000 என அவர் குறிப்பிட்டுள்ளாராம். 

கண் மருத்துவரின் அறிவுரையின் பேரில், வேறு வழியே இல்லாமல் இந்த அதிகவிலை கண்ணாடி லென்ஸை வாங்கியதாக சபாநாயகரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுபோக, 2016-18க்குள், மருத்துவ செலவுக்காக தனியே ரூ.4.25 லட்சத்தை அவர் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ செலவு அவருக்கு மட்டுமல்லாமல், அவரது மனைவி, குழந்தைகள், தாயார் ஆகியவர்களுக்கு சேர்த்து பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

மற்றொரு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, ரூ.28,000-க்கு மூக்கு கண்ணாடி வாங்கியதாக குறிப்பிட்டு அந்த பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆயுர்வேத சிகிச்சை பெற்றதற்காக, ரூ.1.2 லட்சத்தை அரசிடம் இருந்து நிதியமைச்சர் ஐசக் பெற்றுக் கொண்டதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close