அவமானப்படுத்திவிட்டார் சித்தராமையா! தேவகவுடா புலம்பல்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 11 Feb, 2018 07:54 am

தன்னைச் சித்தராமையா அவமானப்படுத்திவிட்டதாகவும், அவர் மீண்டும் முதல்வர் ஆவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாகவும் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடக முதல்வராக இருக்கும் சித்தராமையா, ஒரு காலத்தில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்தவர். அங்கிருந்தால் முன்னேற முடியாது என்பதால், தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆனால், அதற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இதனால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சித்தராமையாவை முன்னிறுத்தித் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ். எடியூரப்பா உள்ளிட்டவர்கள் மீது இருந்த அதிருப்தி காரணமாகக் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்றது. 

இந்தநிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் தனக்கு அவமரியாதை நிகழ்ந்ததாக மதச்சார்பற்ற கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், தேவகவுடா கலந்து கொண்டு பேசியதாவது: 

"சரவணபெலகோலாவின் மகாமஸ்தாபிஷேக தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நானும் கலந்து கொண்டேன். அழைப்பிதழில் எனது பெயர் அச்சிடப்பட்டிருந்தும் எனக்குப் பேச எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. என்னை அவமானப்படுத்தும் நோக்கில் சித்தராமையா செயல்பட்டு வருகிறார். கர்நாடக அரசியல் வரலாற்றில் நான் கண்ட தரம் தாழ்ந்த அரசியல்வாதி சித்தராமையா. இப்படிப்பட்ட ஒருவரை நான் வளர்த்துவிட்டதற்காகக் கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அவர்தான் முதல் அமைச்சரா? எத்தனை நாட்களுக்கு அவர் முதல்வராக இருப்பார் என்பதை நான் பார்க்கிறேன். சித்தராமையா மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பேன். கர்நாடக முதல்வராக தொடர்வதற்கான அனைத்து தகுதிகளையும் சித்தராமையா இழந்துவிட்டார்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close