இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை புறக்கணிக்கிறாரா மோடி?

  SRK   | Last Modified : 21 Feb, 2018 08:53 am


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்துடன் ஒரு வார சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். தாஜ் மஹால், மதுரா தேசிய பூங்கா ஆகியவற்றுக்கு சென்ற அவர், நேற்று குஜராத் சென்றார்.

பிரதமர் ட்ரூடோ இந்தியா வந்தது முதல் பிரதமர் மோடி அவரை புறக்கணித்து வருவதாக சில தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில முக்கிய தலைவர்கள் வரும்போது விமான நிலையத்திற்கு சென்று வரவேற்கும் பிரதமர் மோடி, ட்ரூடோவை சந்திக்க செல்லவில்லை. மேலும், பிரதமரின் ட்விட்டர் கணக்கில், ட்ரூடோவை வரவேற்றோ அல்லது அவரது வருகையை அங்கீகரித்தோ எந்த ட்வீட்டும் இல்லை. இந்நிலையில், தனது சொந்த ஊரான குஜராத்துக்கு அவருடன் மோடி செல்லாதது மேலும் கேள்விகளை எழுப்பியது.

ஒரு வார பயணத்தில் முதலில் சுற்றுலா தலங்களுக்கு சென்றுவரும் ட்ரூடோ, இறுதியில் பிரதமரை சந்திக்கிறார். அப்போது இருநாட்டு உறவு பற்றிய பேச்சுவார்த்தைகளும், வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமரின் மவுனம் பலருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பஞ்சாப்பை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்கும் சீக்கிய பிரிவினைவாதிகள் அமைப்புக்கு கனடா நாட்டில் ஆதரவு தெரிவித்த சர்ச்சையில் ட்ரூடோ கட்சியை சேர்ந்த சீக்கிய அரசியல்வாதிகள் சிலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை கண்டிக்காததால், ட்ரூடோ மீது இந்திய அரசு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்திய அரசு தரப்பில், அப்படி எதுவும் இல்லை என கூறியுள்ளனர். பிரதமர் ட்ரூடோ இன்று பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கை சந்திக்கிறார். கனடா நாட்டில் கணிசமான அளவு சீக்கியர்கள் வாழ்ந்து வரும் நிலையில், இந்த சுற்றுப்பயணத்தினால் அவர்கள் மத்தியில் ட்ரூடோவின் அபிமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close