சி.பி.ஐ கஸ்டடியில் கார்த்தி; சிதம்பரம் தீவிர ஆலோசனை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Mar, 2018 11:59 pm

கார்த்தி சிதம்பரத்துக்கு ஐந்து நாள் சி.பி.ஐ காவல் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் தங்கள் அலுவலகம் அழைத்துச் சென்றனர். கார்த்தியை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக ப.சிதம்பரம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று (புதன் கிழமை) சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உடனே, டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், நேற்று மாலை அவரை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று (வியாழன்) அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, கார்த்தியிடம் விசாரணை நடத்த கால அவகாசம் போதவில்லை. அவர் சரியான ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார். எனவே மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ அனுமதி கோரியது. ஆனால், இதற்கு, கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மார்ச் 6-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், தினமும் மாலையில் ஒரு மணி நேரம் வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி அளித்தார். மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகளை உட்கொள்ள தடை எதுவும் இல்லை. ஆனால், வீட்டு உணவுகளை அனுமதிக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close