லெனின் சிலை உடைப்பு; திரிபுராவில் வன்முறை

  SRK   | Last Modified : 06 Mar, 2018 12:12 pm


சமீபத்தில் திரிபுரவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியடைந்தது. இதற்கு முன் அந்த மாநிலத்தில் ஒரு சட்டமன்ற சீட் கூட இல்லாத பாரதிய ஜனதா, 35 இடங்களை வென்றதோடு, அதன் கூட்டணியான ஐ.பி.எஃப்.டி 8 இடங்களை கைப்பற்றியது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டே நாட்களில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல இடங்களில் இடதுசாரிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்டகாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திரிபுராவின் பெலோனியா பகுதியில் நேற்று ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் லெனினுக்கு வைக்கப்பட்ட சிலை உடைக்கப்பட்டது. புல்டௌசரை வைத்து காவி உடை அணிந்த சிலர் சிலையை உடைத்ததும், 'பாரத் மாதா கி ஜெய்' என கூச்சல்களிட்டதும் இது தொடர்பான ஒரு விடியோவில் தெரிகிறது. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக சிபிஐ குற்றம் சாட்டி வருகிறது. 


இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சியினர்களாக இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபடும் என தெற்கு திரிபுராவின் பா.ஜ செயலாளர் ராஜு நாத் தெரிவித்தார். "ரஷ்யாவில் உள்ள ஒருவருக்கு அங்கு சிலை வைத்தது அந்த பகுதி மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களே இவ்வாறு செய்திருக்கலாம். மக்கள் வரிப்பணத்தில் ஏதோ ஒரு நாட்டின் தலைவருக்கு ஏன் சிலை வைக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

சுமார் 200 பேர் பா.ஜ-கவினர் நடத்திய வன்முறை தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் சிபிஐ தொண்டர்கள், தங்கள் கட்சியை சேர்ந்த 49 பேரை தாக்கியதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close