ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து தனது பிறந்த நாளான வரும் 20-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், அனைத்து தொகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரா பாபு நாயுடு, தனது பிறந்த நாளான 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று(திங்கள் கிழமை) நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில், 9 மந்திரிகளும் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் அதே நாளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். மேலும், 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துமாறும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து,வரும் 30-ம்தேதி மத்திய அரசைக் கண்டித்து திருப்பதியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசு ஆந்திர பிரிவணையின் போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அங்கிகாரமும், வளர்ச்சி நிதியும் ஒதுக்கப்படும் என 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிக்கப்படாததால் பா.ஜனதா கூட்டணியை விட்டு விலகினார் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.