பா.ஜ.க மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தீவிர முயற்சி

  முத்துமாரி   | Last Modified : 15 Mar, 2018 06:19 pm


மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக முதல் முறையாக ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களை பா.ஜ.க கண்டுகொள்வதில்லை என ஆந்திர மாநில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


இதனால் முதல் முறையாக பா.ஜ.க மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாளைய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இந்த தீர்மானத்தை முன்வைக்க உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், நாடாளுமன்ற மக்களவை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், இந்த தீர்மானத்தை கொண்டுவர மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெற கோரிக்கை விடுத்து வருகிறது. 

மத்தியில் பா.ஜ.க அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்து வருவதால் இந்த தீர்மானம் பாதிப்பை ஏற்படுத்தாது. இருந்தாலும் ஆந்திராவின் மீது கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை கொண்டுவர முயற்சித்து வருகிறது. இதன்மூலம், தெலுங்கு தேசம் - பா.ஜ.க கூட்டணிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அக்கட்சி கருதுகிறது. இந்த அதிகப்படியான அழுத்தம் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சி கூட தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை  எனில் ஏப்ரல்  6ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜினாமா செய்வர் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close