ரூ.20 லட்சம் வரை வரிவிலக்கு; பணிக்கொடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 04:00 pm


தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குடன் பணிக்கொடை வழங்கும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று(மார்ச் 22) நிறைவேறியது. 

அரசு மற்றும் அரசு துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் பொருட்டு 1972ம் ஆண்டு பணிக்கொடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, அரசு மற்றும் தனியார் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கு பின் அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப பணிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. ரூ.10 லட்சம் வரை வரி விலக்குடன் இந்த பணிக்கொடை அளிக்கப்படுகிறது. 

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.20 லட்சம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசுத்துறைக்கு மட்டுமல்லாமல் அரசின் மாநில அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த முறையை கொண்டு வர நாடாளுமன்ற மக்களவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 15ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா நேற்று(மார்ச் 22) மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன் அடிப்படையில் ரூ.20 லட்சம் வரை அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை, வரி இல்லாமல் அளிக்கப்படும். 

இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கை பின்வருமாறு:

பணிக்கொடை வழங்குதல் திருத்த மசோதா 2018 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தனியார் துறை மற்றும்  பொதுத்துறை நிறுவனங்கள் / சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின்கீழ் வராத, அரசின்கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஊழியர்களிடையே இணக்கத்தை இந்த மசோதா உறுதி செய்கிறது. அரசுத் துறையில் உள்ள தங்களையொத்த ஊழியர்களுக்கு இணையாக, அதிகபட்ச பணிக்கொடை பெறுவதற்கு, இந்த ஊழியர்கள் உரிமை பெற்றவர்கள் ஆவர். இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று(மார்ச் 22) நிறைவேற்றப்பட்டது.  மக்களவையில் 15.03.2018 அன்று நிறைவேற்றப்பட்டது.

1972-ஆம் ஆண்டின் பணிக்கொடை வழங்கல் சட்டம் 10 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும். பணியாற்றுவோருக்கு ஓய்வுக்குப் பின் (வயது முதிர்ச்சி அல்லது உடல் ரீதியாக செயல்பட இயலாமை அல்லது உடலின் முக்கியமான உறுப்பு செயலிழத்தல் காரணமாக ஓய்வு பெறுதல்) சமூகப் பாதுகாப்பு வழங்கும் முக்கிய நோக்கத்துடன், இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே, பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972 என்பது, தொழில் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் ஊதியம் பெறும் மக்களுக்கு மிக முக்கியமான சமூகப் பாதுகாப்பு சட்டமாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.