பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் நலன் முக்கியமா? அரசா?- ப.சிதம்பரம்

  Sujatha   | Last Modified : 02 May, 2018 07:50 am


பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளதாக முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.43 ஆகவும், டீசல் லிட்டர் ஒன்று ரூ.69.56 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்தால் ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு ஒரு ரூபாய் வரி உயர்த்துவது மக்களுக்கு ரூ.13,000 கோடி சுமையை ஏற்றுவது ஆகும்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு மக்களின் நலன் முக்கியமா? அல்லது அரசின் நலனா? பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்படும் வரிச்சுமை, மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்சினையாக மாறிவருகிறது.

மத்திய அரசு 100% கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கூறுகிறது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டிலேயே, 94% கிராமங்களுக்கு மின் இணைப்பு காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கும் போது, முழுமையாக மின் இணைப்பு கொடுத்துவிட்டதாக எப்படி பாஜக அரசு சொல்கிறது?

மத்திய அரசு 18,452 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5,97,464 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 5,790,12 கிராமங்களுக்கு யார் மின் இணைப்பு கொடுத்தது, மோடி பிரதமராக வருவதற்கு முன் எந்த அரசு கொடுத்தது என்பதை மோடி தயவுசெய்து கூற வேண்டும்.

அம்மா கேக் சமைத்தார். விருந்தாளி அந்த கேக்கை பிரிட்ஜில் வைத்து தானே அந்த கேக்கை தயாரித்ததாக பெருமையடிக்கிறார். அதுபோலத்தான் பிரதமர் மோடியும் பேசுகிறார். கடந்த 65 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஏதும் நாட்டுக்கு செய்யவில்லை என்றால், எப்படி 5,79012 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்க முடியும்?'' இவ்வாறு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close