25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா... இந்த ஆண்டாவது நிறைவேறுமா?

  முத்துமாரி   | Last Modified : 08 Mar, 2018 03:45 pm

திருச்சி அருகே நேற்று ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்திருக்கிறார்... நாகாலாந்தில் இதுவரை ஒரு பெண் கூட எம்.எல்.ஏ- ஆனது இல்லையாம்... இந்தத் தருணத்தில் வழக்கம் போல், சம்பிரதாயமாக மகளிர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மகளிருக்கு சம உரிமை கொடுப்பதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை வருடங்களாக மகளிர் தினம் கொண்டாடினாலும், இந்தியாவில் 1996ல் கொண்டு வரப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி தெரிந்துகொள்வோம்.

உள்ளாட்சி அமைப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று 1993ல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு படி உயர்ந்து. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது இருந்து இன்று வரை இதற்கான போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 'மகளிர் இட ஒதுக்கீடு மசோதா' 1996ம் ஆண்டு நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் மத்தியில் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி செய்து வந்தது.

இதற்கு சமாஜ்வாதி, ராஷ்டீரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று இந்த மசோதா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதும், அதன் மீதான விவாதம் நடைபெற்றுவதுமாக இருந்து வந்ததே தவிர, நிறைவேற்றப்படவில்லை. பின்னர் 2008ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, 2010ல் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த மசோதா நிறைவேறியது.

மக்களவையை பொறுத்தவரை 1998 முதல் 2008 வரை 5 முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசப்பட்டுள்ளது. மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தும் எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்ததால் முடங்கிப்போனது.

2005ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, எதிர்கட்சிகளுடன் இந்த மசோதா குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் இடதுசாரி கட்சிகள், ராஷ்டீரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. ஆனால் லல்லுபிரசாத் யாதவ், முலாயம் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கைவிடப்பட்டது. இந்த கூட்டத்தில் தேசிய முற்போக்கு கூட்டணி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்த்தக்கது.

தொடர்ந்து கிடப்பில் இந்த மசோதா, 2015ல் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு மக்களவையில் ஒருமுறை கூட விவாதிக்கப்படவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தின் போது அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக நல மற்றும் பெண்கள் நல அமைப்புகள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்தியில் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில், மகளிருக்கான இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெண்களுக்கு லோக்சபா மற்றும் சட்டமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். இட ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்ற மகளிருக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பெண்கள் குடும்பத்தில், அரசின் முக்கியத்துறைகளில் மட்டுமல்லாமல் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் அரசியலில் முழுமையாக கால்பதிக்க உதவும். எனவே நாடாளுமன்ற மக்களவையில் கிடப்பில் உள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

1996ம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் நாம் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறோம். தலைவர்கள் பலரும் 'பெண்கள் மென்மேலும் முன்னேற்றம் காண வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர். வரும் ஆண்டுகளிலாவது மசோதா நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close