பெரும்பான்மையை நிரூபிக்க அமித் ஷாவின் பலே வியூகம்... மிரளும் எதிர்க்கட்சிகள்!

  Newstm Desk   | Last Modified : 17 May, 2018 01:18 pm


கர்நாடக சட்டப்பேரவையில் பா.ஜ.க தனது பெரும்பான்மையை நிரூபிக்க அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரது அதிரடி வியூகத்தால் எதிர்க்கட்சிகள் கதிகலங்கிப்போய் உள்ளன. 

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில்  பா.ஜ.க  - 104, காங்கிரஸ் - 78, ம.ஜ.த - 37, சுயேட்சை -3 தொகுதிகளை கைப்பற்றின. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் பா.ஜ.க 104 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

இதனால் பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதை தடுக்கும் பொருட்டு காங்கிரஸ் - ம.ஜ.த  கட்சிகள் இணைந்தன. இரு கட்சியும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 115 தொகுதிகள் இருப்பதால், 'ஆட்சி நம் கையில் தான்' என்ற முனைப்பில் காங்கிரஸ் செயல்பட்டது. மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே, குறைந்த தொகுதிகளை பெற்றிருந்தாலும் முதல்வர் பதவி ம.ஜ.தவின் குமாரசுவாமிக்கே கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து பா.ஜ.க, காங்கிரஸ்- ம.ஜ.த கூட்டணி ஆகிய இரு தரப்பிலும் இருந்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த இடத்தில் காங்கிரஸ்-க்கு ஒரு செக் வைத்து, ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வழக்கு தொடுத்து, அது அவசர வழக்காக நள்ளிரவில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டது.


அதன்படி,  இதில் ஆளுநரின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க முடியாது எனக்கூறி எடியூரப்பா முதல்வராக பதவியேற்க தடையில்லை என உத்தரவிட்டது, மேலும் எடியூரப்பா சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள்ளாக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து எடியூரப்பாவும் இன்று முதல்வராக பதவியேற்றுவிட்டார். 

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பா.ஜ.க 100 கோடி ரூபாய் கொடுப்பதாக அழைப்பு விடுக்க, அணி தாவலை தடுக்க காங்கிரஸ், தனது எம்.எல்.ஏக்களை பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள ஈகிள்டன் விடுதியில் தங்க வைத்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், பா.ஜ.க எவ்வாறு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என்பது தான் அனைத்து தரப்பினரின் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க முன்னதாகவே ஒரு அதிரடி வியூகத்தை வகுத்துள்ளது. 


பிளான் 1: கட்சியை உடைக்க திட்டம்...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரான தேவ கவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா. ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் இவருக்கு ம.ஜ.தவில் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. எனவே ம.ஜ.த எம்.எல்.ஏக்களை பிரிப்பதின் மூலமாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியும் என பா.ஜ.க தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள நிலையில் ரேவண்ணாவிடம் இதுகுறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேவண்ணா, பா.ஜ.கவுக்கு ஆதரவு தரும் பட்சத்தில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் எனவும் பா.ஜ.க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவின் இந்த வியூகம் ஜெயித்தால் கர்நாடகாவின் ஆட்சிக்கு எந்த பாதகமும் இருக்காது.

பிளான் 2: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா...

அதேநேரத்தில், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியிலும் பா.ஜ.க தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம், தானாகவே, பா.ஜ.க பெரும்பான்மை பெற்றுவிடும். ஆட்சியைத் தொடர்வதில் சிக்கல் இருக்காது. இதனால், எம்.எல்.ஏ-க்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரத்தில் தேவ கவுடாவின் இளைய மகன் குமாரசுவாமி, 'சட்டப்பேரவையில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. எவ்வாறு நிரூபிக்கிறார் என்று பார்ப்போம்' என சவால் விட்டு வருகிறார். மேலும் அவர் பா.ஜ.கவுக்கு எதிராக போராட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரிடம் ஆதரவு கோரியுள்ளார். 

இந்த நிலைமையில் பா.ஜ.கவின் திட்டம் செல்லுபடியாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close