நாடாளுமன்றத்தை மோடி மூடிவிடலாம்! - சோனியா காந்தி அதிரடி அட்டாக்

  PADMA PRIYA   | Last Modified : 09 Mar, 2018 04:14 pm

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சோனியா கட்சி ரீதியிலான பல விஷயங்கள் குறித்தும் இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட அவர் பேசினார். அப்போது ராகுல் குறித்து கூறிய அவர், காங்கிரசில் அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும் என ராகுல் விரும்புகிறார். அதற்காக மூத்த தலைவர்களை அவர் புறக்கணிக்கவில்லை. அவருக்கு தனது பொறுப்புகள் குறித்து தெரியும். மேலும் அறிவுரை வழங்க நான் உள்ளேன்.

கருத்து சுதந்திரம் பறிபோனது: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நமது சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. நாட்டில் ஒருவர் கருத்துக்களை மற்றொருவர் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்பின்மை வளர்ந்து வருகிறது. சிறுபான்மை மக்களிடையே ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது, அவர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களைத் தட்டிக்கேட்க வேண்டிய, நியாயத்தை கேட்க வேண்டிய குரல்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றன. இதன் காரணமாக, மத துவேஷங்களை தூண்டிவிட்டு, பதற்றம் அதிகரித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பாஜக மக்களிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி வருகிறது. நமது நாடு மிகப்பெரிய வன்முறைகளுக்கு மத்தியில் இருந்துவருகிறது. நமது சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது. தலித்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறை நடக்கிறது. நல்லுறவு, நல்லிணக்கம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மக்களை கட்டுப்படுத்தும் கருவியாக ஆதார் மாறியுள்ளது. பாஜகவின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் சீரழிந்துள்ளது. நமது நீதித்துறை குழப்பமான சூழலுக்கு உட்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை மூடலாமே! தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படைத் தன்மைக்காக காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது ஆனால், இன்று சட்டம் யாருக்கும் பயன்படுத்தப்படாமல், குளிர்பதன அறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் இருந்து கொண்டு எதிர்கட்சிகளின் குரல்களை நசுக்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாவிட்டால், அவர்கள் பேச்சு சுதந்திரத்தை பறித்தால், நாடாளுமன்றத்தை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விடலாமே.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய அரசுபோன்று இப்போதுள்ள அரசு இல்லை. இப்போதுள்ள பாஜக அரசு நாடாளுமன்ற விதிகளையும், செயல்முறைகளையும் மதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்வேன். வெற்று கோஷங்கள் மீது நம்பிக்கையில்லை. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசின் துறைகள் ஏவிவிடப்பட்டுள்ளன. வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட கட்டுப்பாடுகள் இல்லை. மாற்று கருத்து வெளியிட அனுமதிக்கப்படவில்லை.

மன்மோகனே பதவிக்கு ஏற்றவர்: கட்சி அனுமதிக்கும் பட்சத்தில், தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். எனக்கான எல்லை என்ன என்பது எனக்கு தெரியும். இதனால் தான் 2014-ல் மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தேன். பிரதமர் பதவியில் என்னை விட மன்மோகன் சிங் சிறப்பாக செயல்படுவார் என கருதினேன். காங்கிரஸ் முஸ்லிம் கட்சி என பிரச்சாரம் செய்யப்படுகிறது. நானும் ராஜிவ்வும் பல கோயில்களுக்கு சென்றிருந்தாலும் அதனை வெளியில் சொல்வதில்லை.

பொய்த்துபோன வாக்குறுதிகள்: தேர்தலின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி எதையும் இந்த நிறைவேற்றவில்லை. இதனால் மக்களுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், வெற்றி எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 2019-ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். பா.ஜ.க ஆட்சிக்கு வர விட மாட்டோம். பல மாநிலங்களில் உள்ள கட்சிகள் அனைத்தும் வெவ்வேறு திசையில் இருக்கின்றன. அதனால் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வருவதில் சிக்கல் உள்ளது. எங்கள் கட்சியிலும் ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும். அரசியலில் தனது பங்கு குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும். மக்களுடன் ஒன்றிணையப் புது வழிகளை காங்கிரஸ் கையாள வேண்டும்" என்றார் அவர்.

சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஒதுங்கியே இருக்கிறார். வாழ்வா சாவா என்பதுபோல் இருந்த உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் போது கூட பிரசாரம் செய்வதாக கூறிய சோனியா, உடல் நலக் குறைவு காரணமாக பிரசாரத்துக்கு வரவில்லை. இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோர்வை அளித்தது. தற்போது, மோடியையும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளார் சோனியா. மேலும், எதிர்க்கட்சிகளைத் திரட்டும் வேலையையும் மேற்கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனியா காந்தியின் இன்றைய பேச்சு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close