மும்பையை அடைந்தது மெகா விவசாயிகள் பேரணி: செவிசாய்க்குமா அரசு?

  PADMA PRIYA   | Last Modified : 11 Mar, 2018 09:53 pm

மகாராஷ்ட்ராவில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் நாசிக்கில் தொடங்கிய பிரம்மாண்ட பேரணி மும்பையை அடைந்தது. இந்த மெகா விவசாயிகள் அணி நாளை சட்டப்பேரவையை முற்றுகையிடுகின்றனர்.

மகாராஷ்ட்ராவில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி கடந்த 6-ஆம் தேதி நாசிக்கில் தொடங்கியது. 180 கிலோமீட்டர் பேரணியாக வந்துள்ள 30,000 பேர் நாளை மும்பையில் உள்ள மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையை முற்றுகையிட உள்ளனர். கடன் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை மும்பையை விட்டு வெளியேறப் போவதில்லை என இவர்கள் கூறியுள்ளனர்.

சற்றும் எதிர்பாராத இந்த விவசாயிகளின் பேரணியால் அந்த மாநில அரசு திண்டாடிப்போயுள்ளது. அனைத்து மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மும்பை தேசிய நெடுஞ்சாலையின் பல முனைகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கிசான் சபா என்ற இயக்கம் திரட்டிய இந்த விவசாய மெகா பேரணிக்கு கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, சிவ சேனா ஆகியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த போராட்டம் குறித்து அனைத்து இந்திய கிசான் சபா(ஏஐகேஎஸ்) அமைப்பின் தலைவர் அசோக் தாவ்லே கூறுகையில்: "விவசாயிகளின் பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வனத்துறை நிலங்களை விவசாயிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ஆதிவாசிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும், மஹாராஷ்டிராவின் நீரை குஜராத் மாநிலத்துக்கு பகிர்ந்தளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாசிக் நகரில் இருந்து மும்பைக்கு 30 ஆயிரம் விவசாயிகள் நடைபயணம் வந்துள்ளோம்" என்றார்.

தற்போது மும்பையின் எல்லைப் பகுதியில் தங்கியுள்ள விவசாயிகள், நாளை மும்பை நகருக்குள் நுழைய உள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தை முற்றுகையிட வருவதை எப்படி தடுப்பது என்று போலீசார் ஆலோசனை நடத்திவருகின்றனர். முற்றுகை போராட்டத்தில் வன்முறை நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா மற்றும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், என்ன ஆகுமோ என்ற பதற்றம் மும்பையில் ஏற்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close