பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியதால் நான் அதிர்ச்சி அடையவில்லை என காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ.க கூட்டணி முறிந்ததையடுத்து, பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "காஷ்மீர் ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளேன். மேலும், யாரையும் கூட்டணிக்கு அழைக்க விரும்பவில்லை என்றும் ஆளுநரிடம் தெரிவித்து விட்டேன். காஷ்மீரில் ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கவில்லை. தொலைநோக்கு பார்வையுடன், மக்களின் நலனுக்காகவே பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கப்பட்டது. எனவே இன்று பா.ஜ.க ஆதரவை வாபஸ் பெற்றதால் அதிர்ச்சி அடையவில்லை. பாகிஸ்தானில் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கருத்தாக இருந்தது.அதற்கு பா.ஜ.க ஒத்துப்போகவில்லை. பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களது கொள்கை" என்றார்.