ஹிட்லரை விட மோசமானவர் இந்திரா காந்தி - அருண்ஜெட்லி விமர்சனம்!  

  சுஜாதா   | Last Modified : 26 Jun, 2018 06:22 am

arun-jaitley-compares-indira-gandhi-to-hitler

நாட்டின் நெருக்கடி நிலை காலத்தில், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரே செய்யாததை கூட இந்திரா காந்தி செய்தார் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். நேற்று அதன் 43-வது நினைவு தினம் ஆகும்.

தற்போதைய மத்திய மந்திரி அருண் ஜெட்லி தனது அனுபவங்களை ‘பேஸ்புக்’ பக்கத்தில் 3 பகுதிகளாக கட்டுரை எழுதி வருகிறார். அதன் 2-வது பகுதியை நேற்று வெளியிட்டார். அதில் அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். அதன் விவரம்:
  
"நெருக்கடி நிலை காலத்தில் நான் அம்பாலா சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அப்போதைய சிறை விதிகளின்படி, கைதி ஒருவருக்கு தினப்படி பட்ஜெட்டில் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 மட்டுமே. இதில்தான் உணவு உள்ளிட்டவைகளை நிர்வகிக்க வேண்டும்.

1933-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி படைகள் அத்துமீறலை முன்மாதிரியாக கொண்டுதான் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை கொண்டுவரப்பட்டதோ என்று தோன்றுகிறது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியல் சட்டத்தை ரத்து செய்யவில்லை. மாறாக, குடியரசு அரசியல் சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்றினர். இந்திரா காந்தி ஒருபடி மேலே சென்று, இந்தியாவை பரம்பரை ஜனநாயகமாக மாற்றினார்.

ஹிட்லர், தனது செயல்கள் அரசியல் சட்டத்தின் 4 மூலைகளுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். அதேபோல், இந்திராவும் அரசியல் சட்டப்பிரிவு 352-ன் கீழ், நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார். இதில் அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கி, செயலிழக்க செய்தார். ஹிட்லரும், அவரது நாட்டு அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை சுட்டிக் காட்டி, ‘மக்களை பாதுகாப்பது’ என்ற பெயரில் சர்வாதிகார செயல்களை நியாயப்படுத்தினார்.

ஹிட்லர் செய்யாத சில விஷயங்களை கூட இந்திரா காந்தி செய்தார். அரசமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை திருத்தினார். நாடாளுமன்ற நிகழ்வுகளை பொதுமக்களுக்கு சென்றடையாவண்ணம் ஊடகங்கள் அதைப்பற்றி எழுத தடை விதித்தார். இதை ஹிட்லர் கூட செய்யவில்லை.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை ‘புரட்சிகரமானது’ என்று எப்படி கோயபல்ஸ் பேசினாரோ, அதேபோல், காங்கிரசாரும் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை ‘புரட்சி’ என்று பேச வைக்கப்பட்டனர்.

இந்திராவும், ஹிட்லரும் செயல்படுத்திய ஊடக தணிக்கை முறை கிட்டத்தட்ட ஒரேமாதிரியானதுதான். ‘ஜெர்மனியில் ஒரே அதிகாரம்தான் உள்ளது, அது ஹிட்லர்’ என்று ஒரு நாஜி தலைவர் கூறினார். அதேபோல், ‘இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா’ என்று காங்கிரஸ் தலைவர் தேவகந்தா பரூவா கூறினார்.

ஹிட்லர் 25 அம்ச பொருளாதார திட்டத்தை அறிவித்தார். ஆனால், இந்திரா காந்தி 20 அம்ச திட்டம்தான் அறிவித்தார். அந்த பற்றாக்குறையை நிரப்ப, சஞ்சய் காந்தி 5 அம்ச பொருளாதார, சமூக திட்டத்தை அறிவித்தார்." இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

அருண் ஜெட்லியின் இந்த பதிவை, பிரதமர் மோடி தனது ட்விட்டர்’ பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.