உ.பி தேர்தல் LIVE: கோரக்பூர், புல்பூர் தொகுதிகளைக் கைப்பற்றியது சமாஜ்வாடி! - டெபாஸிட் இழந்தது காங்கிரஸ்

  முத்துமாரி   | Last Modified : 15 Mar, 2018 07:44 am

உத்தரபிரதேசத்தில் மக்களவை தொகுதிகளான கோரக்பூர், புல்பூர் மற்றும் பீகாரின் மக்களவை தொகுதி அராரியா, சட்டமன்ற தொகுதிகள் பப்புவா, ஜெகனாபாத் ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

6 PM: உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளை சமாஜ்வாடி ஜனதா கைப்பற்றியது. அதேபோல், பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் அராரியா மக்களவைத் தொகுதியையும், ஜெஹனாபாத் சட்டமன்ற தொகுதியையும் கைப்பற்றியது. பா.ஜ - ஜனதா தள கூட்டணி பீகாரின் பபுவா சட்டமன்ற தொகுதியை வென்றது. உத்தரபிரதேசத்தில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.

5.00 PM: உ.பி தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பா.ஜ.க மீது மக்கள் கோபத்தில் உள்ளனர், இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் பா.ஜ.க மீதுள்ள கோபத்தை காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.

5.00 PM: உத்தரப்பிரதேசத்தின் புல்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதியின் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.00 PM: பீகார் சட்டமன்றத் தொகுதியான பப்புவா தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ரிங்கி ராணி பாண்டே, காங்கிரஸின் ஷம்பு சிங் படேலை 15,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

4.00 PM: உ.பியில் 25வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதி கோரக்பூரில் 22,954 மற்றும் புல்பூரில் 38,498 வாக்குகள் பெற்று முன்னிலை.

3.45 PM: பீகார் சட்டமன்ற தொகுதியான ஜெகனாபாத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமார் கிருஷ்ண மோகன் 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்குகள் எண்ணிக்கை அந்த தொகுதியில் முடிந்து விட்டதால் அதிகாரபூர்வ அறிவிப்பு சிறிது நேரத்தில் வெளியாகும்.

3.30 PM: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌத்ரி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியை சந்தித்தார். உத்தரபிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

3.25 PM: பகுஜன் சமாஜ் வாக்குகள் சமாஜ்வாடிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை என்று உத்தர பிரதேச துணை முதல்வர் கே.பி.மெளரியா தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்குப் பிறகு இது பற்றி பா.ஜ.க ஆய்வு நடத்தும். எதிர்காலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் இணைந்து தேர்தலை சந்தித்தால் எதிர்கொள்வது பற்றி அப்போது தீர்மானிக்கப்படும். மேலும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான செயல்திட்டமும் உருவாக்கப்படும் என்றார்.

3.05 PM: கோரக்பூரில் சமாஜ்வாடி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 28,737 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அங்கு 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது.

2.30 PM: உ.பி.யில் கோரக்பூர் தொகுதியில் 20,000 மற்றும் புல்பூர் தொகுதிகளில் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை

2.00 PM: பீகாரில் அராரியா தொகுதியில் ஆர்ஜேடி( ராஷ்டிரிய ஜனதா தளம்) 23, 187 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. ஜெகனாபாத் தொகுதியில் ஆர்ஜேடி 52, 609 வாக்குகளுடன், பப்புவா தொகுதியில் பா.ஜ.க 40,501 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

2.00 PM: உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்றதையடுத்து, சமாஜ்வாதி கட்சியினர் வண்ணப்பொடிகளை தூவி 'இது இன்னொரு ஹோலி பண்டிகை' என கொண்டாடி வருகின்றனர்.

1.20 PM: பீகார் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சர்ப்ராஸ் ஆலம், பா.ஜ.கவின் பிரதீப் குமாரை விட 14,581 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதன்மூலம் மூன்று லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.கவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோரக்பூர் தொகுதியில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 முறை லோக்சபா உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் காலை நிலவரப்படி, அராரியா மற்றும் பப்புவா தொகுதிகளில் பா.ஜ.கவும், ஜெகனாபாத் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முன்னிலையில் இருந்தது. 1.00 மணிக்கு மேல் அராரியா தொகுதியிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பா.ஜ.கவை முந்தியுள்ளது.

கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சி சார்பில் பிரவீன் குமார் நிஷாத், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட உபேந்திர தத் சுக்லா விட 1,523 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். புல்பூர் தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி 12,231 ஓட்டுகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி சார்பில் நாகேந்திர சிங் பிரதாப் பட்டேலும், பா.ஜ.க சார்பில் கௌஷ்லேந்திர சிங் பட்டேலும் போட்டியிட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மார்ச் 11ம் தேதி நடைபெற்றது. இன்றைய வாக்கு எண்ணிக்கையில் கோரக்பூர் தொகுதியை பொறுத்தவரை 11.30 மணி வரை பா.ஜ.க முன்னிலையில் இருந்து வந்தது. 11.45 மணி அளவில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close