அமித் ஷா - நிதிஷ் குமார் சந்திப்பு: மாலையில் முடிவாகுமா தொகுதி பங்கீடு?

  Padmapriya   | Last Modified : 12 Jul, 2018 04:03 pm
amit-shah-nitish-kumar-meet-over-breakfast-in-patna

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி முன்னேற்பாடுக்கான முயற்சியாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமாரை பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இன்று சந்தித்தார். 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  அந்த வகையில் பீகார் சென்றிருக்கும் அமித் ஷா, அதன் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை சந்தித்தார்.

பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அமித் ஷா மூன்று ஆண்டுகளுக்கு பின் இன்று சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்ததை அடுத்து பாஜக நிர்வாகிகள் உற்சாக களிப்பில் இருக்கின்றனர். பீகார் மாநில அரசின் விருந்தினர் விடுதியில் இரண்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இருவரும் எளிமையான காலை உணவை ஒன்றாக எடுத்துக்கொண்டனர். பரஸ்பரமான இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து இருவருக்குமான பேச்சுவார்த்தை தொடரும் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அத்தகைய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருவரும் இரவு விருந்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீகார் அரசு விருந்தினர் மாளிகையில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தேர்தல் முன் ஏற்பாடுகள், கூட்டணிக் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட உள்ளனர். 

இது குறித்து பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்தா ராய் கூறுகையில், அமித் ஷா கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது. இந்தப் பயணத்தின்போது பாஜகவின் ஊடக அணியினர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரை சந்தித்துப் பேசுகிறார் என்று தெரிவித்தார்.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் 25 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா 15 தொகுதிகளில் போட்டியிட்டு 11 இடங்களில் வென்றது. பின்னர், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்தக் கூட்டணி உடைந்தது. அந்தத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு இருந்த அபார வரவேற்பால் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமார் கட்சிக்கு 2 இடங்களே கிடைத்தன.

அதன் பிறகு பீகாரில் 2015ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தன. 2 ஆண்டுகளில் இந்தக் கூட்டணியில் மோதல் முற்ற, ஐக்கிய ஜனதா தளம் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது.   பாஜகவுடன் கைகோர்த்த நிதிஷ்குமார் புதிய கூட்டணி அரசை அமைத்தார். அவர் முதல்வராகவும் பாஜகவின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர். 

2017லும் இந்தக் கூட்டணி நீடித்த நிலையில், சமீப காலமாக இரு கட்சிகளுக்கு இடையே சலசலப்பு  நிலவுகிறது. இதனால், வரும் நடாளுமன்றத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பணி  கடினமானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக, கடந்த வாரம் இது தொடர்பாக பேசிய நிதிஷ் குமார், பாஜக-வுடனான கூட்டணி மாநிலத்தில் மட்டும் தான் என்றார். இருப்பினும் அமித் ஷா மேற்கொள்ளும் இன்றைய பேச்சுவார்த்தை நிதிஷ் குமாரின் எண்ணத்தை மாற்றுவதாக இருக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வரும் மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணை அமைந்தால் அமோக வெற்றி வாய்ப்பு அமையும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close