கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Aug, 2018 06:48 pm
jeyalalitha-disappeared-karunanidhi-helped-vajpayee-recovering

இந்தியாவின் பிதாமகன் வாஜ்பாய்... ஜனநாயக நாடாக போற்றப்பட்டு வந்த இந்தியாவை உலகமே ஏற்றுக்கொள்ளும் அணுஆயுத நாடாக உருவாக்கியவர் அவர். அப்படிப்பட்ட, வலிமை வாய்ந்த வாஜ்பாயையே கலங்க வைத்தவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

1996ஆம் ஆண்டு மே 16 ம்தேதி வாஜ்பாய் முதன்முறையாக பிரதமராக பதவியேற்றார். அப்போது அவரது பிரதமர் பதவி 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. இரண்டாவது முறையும் அவரது பிரதமர் பதவி வெகுகாலம் நீடிக்கவில்லை. 13 மாதங்களில் பறிபோகக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இன்றைக்கு பா.ஜ.க-வின் மூத்த தலைவராக இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி.

1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனியாக 182 இடங்களை எட்டிப்பிடித்தது. கூட்டணிக் கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க-வும் அடக்கம். அந்தக் கட்சியில் 18 பேர் வெற்றி பெற்றிருந்தார்கள். தேர்தலுக்கு முன் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்த ஜெயலலிதா, வெற்றிபெற்ற பின் நிறம் மாறினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய, ஆதரவுக் கடிதம் கொடுக்கும்போதே முரண்டு பிடித்தார்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி வேண்டும், வாழப்பாடி ராமமூர்த்திக்கு சட்ட அமைச்சர் பதவி வேண்டும் என்றெல்லாம் கேட்டு நிபந்தனைகளால் நிர்பந்தித்தார். பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஆதரவுக் கடிதம் கொடுத்து, அமைச்சரவையிலும் பங்கேற்றது அதிமுக. ஆனால் அப்போது, முரண்பாடுகளின் மொத்த உருவமாக மாறி நின்றார் ஜெயலலிதா. அப்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி.

பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டுமானால் தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அ.தி.மு.க அழுத்தம் கொடுத்தது. மேலும், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், தனி நீதிமன்றத்தை கலைக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். அதனை பிரதமர் வாஜ்பாய் ஏற்கவில்லை. அதனைத் தொடர்ந்து திடீரென அ.தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகினர்.
அடுத்து கடற்படைத் தளபதி விஷ்ணு பகவத் டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கான காரணத்தை கூட்டணிக் கட்சியான எங்களுக்குச் சொல்லவில்லை என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டார். டெல்லி சென்ற ஜெயலலிதா மாற்று அரசு அமைப்பதற்கான கோதாவில் இறங்கினார். சுப்பிரமணியன் சுவாமி ஏற்பாடு செய்திருந்த டீ பார்ட்டியில் சோனியா காந்தியுடன் கலந்துகொண்டார்.

ஆதரவை வாபஸ் வாங்குவதாகக் கடிதம் கொடுத்தார். இதனால், வாஜ்பாய் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. அ.தி.மு.க-வால் கவிழ்ந்தது வாஜ்பாய் அரசு. 15.4.1999 அன்று தனது அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார் வாஜ்பாய். அவரது தீர்மானத்தை ஆதரித்து 269 ஓட்டுகளும் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று 270 ஓட்டுகளும் விழுந்தன. ஜெயலலிதாவால் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் அரியணையை பறிகொடுத்தார் வாஜ்பாய்.  

தோல்விகளில் இருந்து பாடம் கற்ற வாய்பாய் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் வலுவான கட்சிகளை இணைத்தார். இப்போது தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு பதிலாக பாஜக கூட்டணியில் தி.மு.க இணைந்தது. 1999ம் ஆம் ஆண்டு மகத்தான வெற்றிபெற்றது இந்தக் கூட்டணி. தமிழகத்தில் கருணாநிதின் கரம்பற்றி நான்கரை ஆண்டுகள் முழுமையாக பா.ஜ.க அரசை தலைமை தாங்கி வழிநடத்தினார் வாஜ்பாய்.

அதன்பிறகு, தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்த ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுத்தி தேர்தலை சந்தித்தார். 2004 தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரசாரம் செய்யப்பட்டது. உண்மையில் வாஜ்பாய் ஆட்சியில் இந்தியா ஒளிர்நதது. ஆனால், சரியான கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கத் தவறியதன் விளைவாக ஆட்சியைப் பறிகெடுத்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close