சி.பி.ஐ, வருமான வரித்துறையை தூண்டி அரசை கலைக்க பாஜக முயற்சி..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 07 Sep, 2018 05:55 am

bjp-trying-to-topple-govt-says-kumarasamy

மத்திய அரசு துறைகளுடன் இணைந்து தமது ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா முயல்வதாக கர்நாடகா முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோதும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் மிகவும் சொற்ப இடங்களில் வெற்றிபெற்ற குமாரசாமி ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ ஆகிய துறைகளைக் கொண்டு கர்நாடக அரசு மீது குற்றம்சாட்டி கலைக்க முயற்சிப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா வருமான வரித்துறை அதிகாரிகளை ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை எடியூரப்பா தரப்பு மறுத்துள்ளனர். ‘இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இப்படிப் பொறுப்பில்லாமல் குற்றம்சாட்டுவது முறையல்ல. ஏன் இந்த அரசைக் கலைக்க வேண்டும்? நாங்கள் ஒருபோதும் இந்தச் செயலில் இறங்க மாட்டோம்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

தான் எந்த வருமான வரித்துறை அதிகாரியையும் சந்திக்கவில்லை என மறுத்துள்ளார் விஜேந்த்ரா. ‘’குமாரசாமி குழந்தைத்தனமான அறிவிக்கையை வெளியிட்டு இருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார். ’’அவர் வருமான வரித்துறை அதிகாரிகளைச் சந்தித்ததற்கான நம்பத் தகுந்த தகவல்கள் இருக்கின்றன. அந்த ஆதாரத்தை வெளியிடத் தயாராக இருக்கிறேன். விஜேந்த்ரா வருமான வரித்துறை அதிகாரிகளைச் சந்தித்து பேசிய வீடியோ படங்கள் என்னிடம் இருக்கிறது’’ என்கிறார் குமாரசாமி. 

இதுகுறித்து வருமான வரித்துறை இணை ஆணையர் தமிழ்ச்செல்வனிடம் விசாரித்தால், ‘’இந்தச் சந்திப்பு அரசியல் பலிவாங்கும் எண்ணங்களுக்காக நடக்கவில்லை. வருமான வரித்துறை தலைமை இயக்குநர் பணி நேரத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப்பேசவே விரும்பாதவர். இதுவரை தனிப்பட்ட காரணமாக எந்த ஒரு அரசியல்வாதியையும் அவர் சந்தித்துப்பேசவில்லை. இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என மறுத்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close