மீண்டும் கிடைக்குமா முதல்வர் பதவி..? டி.ஆர்.எஸ்-க்கு கிலியை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Sep, 2018 04:45 pm
will-the-cm-get-a-resignation-chandrababu-naidu-check


தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் முதல்வர் சந்திரசேகர ராவ் பீதியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், 6ம் எண்ணை அதிர்ஷ்டமாகக் கருதுபவர். செப்டம்பர் 6 ஆம் தேதி சட்டப்பேரவையைக் கலைப்பதாக அறிவித்தார். கூட்டு எண் 6 வரும் வகையில் 105 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்துள்ளார். வாஸ்து, ஜாதகம், எண் கணிதம் போன்ற விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட முதல்வர்களின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் ஒருவர்.

 

தற்போது 64 வயதாகும் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தெலங்கானா பகுதி மக்களின் நலன் மேம்படத் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது கட்சியைத் துவங்கினார் சந்திர சேகர ராவ். 

2 ஜூன் 2014ம் ஆண்டு தனி மாநிலமாக தெலங்கானா பிரிக்கப்பட்டது. 2014 ஆவது ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 63 இடங்களை வென்றது. பின்னர் பல்வேறு கட்சிகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு தாவினர். இதனால் தெலங்கானா ராஷ்ரிய சமிதியின் உறுப்பினர் எண்ணிக்கை 90-ஐ எட்டியது. தெலங்கானாவின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் சந்திரசேகர ராவ். 

அவர் ஆளும் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் சட்டப்பேரவையை கலைப்பதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை தற்போது நடத்துவது தனக்கு சாதகமாக இருக்கும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கருதுகிறது, அடுத்து வருகின்ற தேர்தலை வென்று விட்டால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமையாகத் தயாராகலாம் என சந்திரசேகர ராவ் கணக்கிடுகின்றார். 2019ல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இணைந்து சந்திப்பதைக் காட்டிலும் முதலில் சட்டமன்ற தேர்தல் அடுத்து நாடாளுமன்ற தேர்தல் என திட்டமிட்டு தற்போதைய சட்டப் பேரவையை கலைக்க முடிவெடுத்தார் சந்திரசேகரராவ். 

பாஜக – ராஷ்டிரிய சமிதி இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகவும் காங்கிரஸ் கருதுகிறது. இதனால், மாற்றுக்கட்சிகளை ஒருங்கிணைத்து ராஷ்டிரிய சமிதிக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ’’நாங்கள் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளை கூட்டணிக்காக ஒருங்கிணைத்து வருகிறோம். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு சாத்தியம் இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையும்’ என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சூராவாராம் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைமை செய்தித்தொடர்பாளர் ஸ்ரவன் டோசொஜு ‘’இந்தத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கானாவில் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. தெலங்கானா மாநிலத்தில் சிதறுண்டு கிடக்கும் எதிர்க் கட்சி வாக்குகளை ஒன்றிணைக்க காங்கிரஸ்- தெலுங்கு தேசம் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சந்திரசேகர ராவின் செல்வாக்கு இப்போது தெலங்கானாவில் சரியத் தொடங்கி இருக்கிறது. 

காங்கிரஸ்- தெலுங்குதேசம் கட்சிகள் தங்களது அமைப்பிலும், பல பலத்திலும் செல்வாக்கான இடத்தில் இருக்கின்றன. இதனால், இந்தத் தேர்தல் சந்திரசேகர ராவிற்கு சோதனையாக அமையும் எனக் கூறப்படுகிறது. அவசரப்பட்டு சட்டசபையை கலைத்துவிட்டோம் என்கிற பீதியும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். தற்போதைய நிலையில் தெலங்கானாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், அங்கு தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என தெலுங்கு தேசம் கட்சி திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார்கள். 

தெலங்கானாவில் தனிக்காட்டு ராஜாவாக கல்வகுண்டலா சந்திரசேகர ராவ் மீண்டும் வலம் வருவது சந்தேகமே என்கிறார்கள். 

- newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close