கதவை சாத்திய டி.ஆர்.எஸ்... பிள்ளையார் சுழி போட்ட நிதிஷ்... அமித் ஷா பலே டீலிங்!

  பா.பாரதி   | Last Modified : 18 Sep, 2018 04:59 am

amit-shah-and-nitish-kumar-meet-brought-up-a-positive-conclusion

அரசியலில் எந்த நேரமும் எந்த அதிசயமும் நிகழலாம் என்பதை உணர்த்தும் வகையில் இரண்டு சம்பவங்கள் அண்மையில் அரங்கேறியுள்ளது. முதலாவது நிகழ்வு - தெலுங்கானாவில்.

அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை  தேர்தலிலும், இதன் தொடர்ச்சியாக அடுத்த  ஆண்டு நடைபெறப்போகும் மக்களவை தேர்தலிலும் பா.ஜ.க மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி(டி.ஆர்.எஸ்) இடையே கூட்டணி உருவாகலாம் என கருதப்பட்டது. இந்த கருத்துக்கு உரம் சேர்ப்பது போல், பா.ஜ.க மேலிடத்தை குளிர்விக்கும் வகையில் ‘ராகுல் மிகப்பெரிய கோமாளி’ என்றெல்லாம் காங்கிரஸை  திட்டி  தீர்த்தார்  டி.ஆர்.எஸ் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ்.

அவர், எம்.ஐ.எம் என்ற கட்சியுடன் நெருக்கம் காட்டுவதை பா.ஜ.க மேலிடம் ரசிக்கவில்லை. இதனால் இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத் வந்த பா.ஜ.க தலைவர் அமித் ஷா "தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்” என்று பிரகடனம் செய்து விட்டு டெல்லி பறந்தார். 

தெலுங்கானாவில் பழம் கை நழுவிப்போன நிலையில், பீஹாரில் கனிந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் புதிய சம்மந்திகளான பா.ஜ.கவுக்கும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் தொகுதிகளை பங்கீடு செய்வதில் சிக்கல் இருந்தது. "மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 20, நிதிஷ் குமாருக்கு 12, ராம் விலாஸ் பஸ்வானுக்கு ஆறு, ஆர்.எல்.எஸ்.பி.கட்சிக்கு இரண்டு" என்பது பா.ஜ.க-வின் கணக்கு. இதனை நிதிஷ்  ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் அங்கு பாஜக கூட்டணி உடையும் நிலையில் இருந்தது. இந்தச் சூழலில் இரு தலைவர்களும் ரகசியமாக  பேசி சுமுகமான தொகுதி உடன்பாட்டை எற்படுத்தியுள்ளனர். இதனை பாட்னாவில் ஞாயிறு அன்று நடந்த ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில்  நிதிஷ் அறிவித்துள்ளார்.

அவரது பேச்சின் சாரம் இது:  "பா.ஜ.கவுடன் நமக்கு தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. அமித் ஷாவுடன் நடந்த இரண்டு சந்திப்புகளில் உடன்பாடு சாத்தியமானது. ஆனால் யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை இப்போது சொல்ல மாட்டேன்’’ என்று பலத்த கைத்தட்டலுக்கு இடையே தொகுதி உடன்பாட்டை பகிரங்கமாக  அறிவித்துள்ளார்.

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.