பா.ஜ.கவை சேர்ந்த நிஷிகாந்த் துபே, தன் தொகுதியான கோத்தாவில் உள்ள கான்ஹவாரா என்ற ஒரு கிராமத்திற்கு ஞாயிறு அன்று சென்றார். அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் வைரல் ஆனதால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்.
அவர் மக்களிடம் அப்பகுதியில் கட்டப்போகும் புது பாலத்தைப் பற்றி தெரிவிக்க சென்ற போது, தொண்டர் ஒருவர் தன் கால்களை கழுவி, அந்த தண்ணீரை பருகியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிஷிகாந்த் துபே செய்த முகநூல் பதிவில், "தொண்டர் தாமாக விரும்பி கால்களை கழுவியதில் தப்பேதும் இல்லை," என பதிவு செய்திருந்தார். பின்பு அந்த பதிவினை தம் முகநூலிலிருந்து நீக்கி விட்டார்.
இதனை தொடர்ந்து கடும் விமர்சனத்துக்கு அவர் ஆளானார். "பா.ஜ.கவின் வீம்பு பிடித்த நிஷிகாந்த் துபே போன்ற தலைவர்கள், அப்பாவி மக்களை ஏமாற்றி, அவமானப்படுத்துவதை தம் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்களை தாங்களே தெய்வமாக வணங்க வைத்து செய்யும் இது போன்ற அநாகரீகமான செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. இது தான் பா.ஜ.க பேசும் நெறிமுறைகளா?இவரைப் போன்றோரை எதிர்த்து, பா.ஜ.க தலைவர் அமீத்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டார்களா? அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது போன்ற ஈன செயல்களில் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு என்றே அர்த்தம், " என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பேச்சாளர், ரந்தீப் சர்ஜ்வாலா கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நிஷிகாந்த் துபே ஜூலை மாதத்தில், ராகுல் காந்தியை கட்டிப்பிடிப்பதால் தம் கட்சியினர் கட்சியை விட்டு விலக வேண்டுமோ என்று பயந்ததாகக் கூறி சர்ச்ச்சையைக் கிளப்பினார்.
தொடர்ந்து அவர் சர்ச்சையை கிளப்புவதால் பா.ஜ.க அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
newstm.in