காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்..? மும்முனை போட்டி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Sep, 2018 04:40 am

congress-s-cm-candidate-for-mp

மத்திய பிரதேச மாநிலத்தில்,  இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக போட்டியிட மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.  

தற்போது இங்கு சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத்துக்கும், அக்கட்சியை சேர்ந்த பிரசார குழு தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோருக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவி வருகிறது. 'கட்சியின் மாநில தலைவர் என்பதால், கமல் நாத்துக்கு தான் அதிக வாய்ப்பு' என, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதனால், அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். இன்னும் காலமிருக்கிறது அவசரப்பட வேண்டாம்' என, 45 வயதாகும் சிந்தியா போட்டியிலிருந்து பின் வாங்கி விட்டார். ஆனால், மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங், விட்டுக் கொடுப்பதாக இல்லை. வாரத்துக்கு ஒருமுறை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரையும், தன் வீட்டுக்கு அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து  அசத்தி வருகிறார். அவர்களுடன், தானும் அமர்ந்து, சாப்பிட்டபடியே, பூத் கமிட்டி, வெற்றி வாய்ப்பு குறித்து, விரிவாகபேசுகிறார். இதைக் கேள்விப்பட்ட கமல் நாத்தின் வயிற்றில், புளி கரைக்கத் துவங்கியுள்ளது.

'மத்திய அமைச்சர், கட்சி பொதுச் செயலர், முதல்வர் என, அனைத்து பதவிகளையும் அனுபவித்து விட்டும், நமக்கு பதவியை விட்டுத்தர இன்னும் மனமில்லையே’’ என கமல்நாத் புலம்பி வருகிறார் என்கிறார்கள். கமல்நாத் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளராகவும் கமல் நாத் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவது ஒருபுறமிருந்தாலும் மீண்டும் அங்கு பாஜகவே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close