பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் எதற்காக?

  ஹரிணி விஜயன்   | Last Modified : 25 Sep, 2018 05:11 am

what-s-new-about-pm-s-ayushman-bharath-scheme

ஆயுஷ்மான் பாரத் - பிரதான மந்த்ரி ஜன ஆரோகிய யோஜனா திட்டத்தை நேற்று, ராஞ்சியில் வெளியிட்டார், பிரதமர் நரேந்திர மோடி. சுமார் 50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், உலகின் மிகப் பெரிய அரசு மருத்துவத் திட்டம் ஆகும். 

இந்தத் திட்டம் 3,500 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. சுதந்திர தின விழாவின் போது இதைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, நேற்று இந்த திட்டத்தை 445 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

"ஏழை மக்களுக்காகவே இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்தத் திட்டத்தின் உதவி எண்ணான 14555 என்ற எண்ணினை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்," என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த விழாவில் கூறினார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா, ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ், ஆளுநர் திரௌபதி மர்மு மற்றும் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 

ஆயுஷ்மான் பாரத் என்றால் என்ன?

ஆயுஷ்மான் பாரத் எனும் இத்திட்டம் மூலம், சுமார் 10 கோடி குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 50 கோடி இந்தியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இதில், ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும். 

1354 வகையான சிகிச்சைகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இரத்தக் குழாய் சார்ந்த சிகிச்சைகளுக்கு, மூட்டுவலி சார்ந்த சிகிச்சைகளுக்கு, போன்ற மேலும் பல சிகிச்சைகளுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை மத்திய அரசு மருத்துவமனைகளை விடக்  குறைந்தக் கட்டணத்தில் சிகிச்சை பெறலாம். 

இத்திட்டத்தைப் பெற தகுதியானோர், அரசு மருத்துவமனைகளையோ அல்லது அரசால் குறிப்பிடப் பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளையோ அணுகி, சிகிச்சையைப் பெறலாம்.  

ஆயுஷ்மான் பாரத் எதற்காக? யாருக்காக?

தேசிய மாதிரி மதிப்பாய்வு அமைப்பின் 71ஆம் முறை நடத்தப பட்ட ஆய்வில், 85.9 சதவீத கிராமப்புற மக்களுக்கும், 82 சதவீத நகர்ப்புற மக்களுக்கும், மருத்துவ காப்பீடு வசதியே இல்லை என தெரியவந்துள்ளது. 
மேலும், 24 சதவீத கிராமப்புற மக்களும், 18 சதவீத நகர்ப்புற மக்களும் தம் மருத்துவ செலவிற்காக கடன் வாங்கியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. 

இதுபோன்ற மக்களுக்கு நன்மை தருவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 3,500 கோடி ரூபாய் செலவில் வெளியிடப்படும் இத்திட்டத்திற்கு 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநிலங்கள் அரசும் வழங்கவுள்ளது.

சமூக நிலையில் பின்தங்கியோர், பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர், சாதியின் அடிப்படையில் பின்தங்கியோர் ஆகியோருக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மைகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை. வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ இருந்தால் போதும். 

குடும்பத்தினரின் எண்ணிக்கையோ வயதோ ஒரு தடையாகக் கருதப்படாது. 

ஏழைகளால் வரவேற்கப்படும் இத்திட்டம், பலரால் எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. தெலங்கானா, கேரளா, ஒடிஷா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இத்திட்டை விட பல நல்ல திட்டங்களை ஏற்கனவே வைத்துள்ளதாகவும், எனவே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் இத்திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மறுத்துள்ளனர். 

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close