தூக்கம் கெடுத்த ’சித்தப்பா’... அகிலேஷ் –மாயாவதி அதிர்ச்சி!

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 03:20 pm

sithapappa-sleeping-akhilesh-mayawati-shocked

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும் இணைந்து, அண்மையில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க.,வை தோற்கடித்தார்கள்.

வரும் மக்களவை தேர்தலில் இருவரும் சேர்ந்து களம் இறங்க உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக புதிய வில்லன்கள் முளைத்துள்ளனர்.
அகிலேஷுக்கு எதிராக நிற்பவர் வேறு யாரும் அல்ல. அகிலேஷின் அப்பா முலாயம் சிங்கின் சகோதரரான  சிவபால் யாதவ்தான். அகிலேஷுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர். அவருக்கு பின்னால் அரசியலுக்கு வந்த அகிலேஷ், முலாயம் சிங்கை மட்டுமல்லாது, சிவபாலையும் ஓரம் கட்டி விட்டு கட்சியை கைப்பற்றிக்கொண்டார்.

முலாயம் சிங் யாதவுடன் சிவபால் யாதவ்

ஆத்திரம் அடைந்த சிவபால், மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, அகிலேஷை ஒழிக்காமல்  விடமாட்டேன் என சபதம் செய்து ‘டூர்’ கிளம்பி விட்டார். மக்களவை தேர்தலில் தனது கட்சி உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று பிரகடனம் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின்  வாக்கு வங்கியான யாதவ சமுதாய ஓட்டுகளை சிவபால் கணிசமாக அறுவடை செய்து விடுவார் என்பதால், அகிலேஷ் செய்வதறியாது நிற்கிறார்.

மாயாவதியின் தூக்கத்தை தொலைத்திருப்பது, சந்திரசேகர் ஆசாத். பீம் ஆர்மி என்ற பெயரில்  கட்சியை நடத்தி வருகிறார். மாயாவதி போல் இவரும் தலித் தலைவர். மேற்கு உ.பி.,யில் இவருக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகளை ஆசாத் கூறு போட்டு விடுவார் என்பதால் பதற்றத்தில் இருக்கிறது மாயாவதி.

பா.ஜ.க.,வுக்கு எதிரான வாக்குகளை, சிவபாலும், ஆசாத்தும் சிதறடிப்பார்கள் என்பதால் மோடியும், அமித்ஷாவும் நிம்மதியில் உள்ளனர் என்பது உண்மை.

-பா.பாரதி

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close