அதிகரித்து வரும் மோடியின் புகழ்: கெஜ்ரிவால் அச்சம்

  தர்மா   | Last Modified : 29 Sep, 2018 03:10 pm

increasing-modi-s-popularty-kejrival-s-fear

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தலைநகர் டெல்லியில் அமல்படுத்தினால் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழ் கிடைத்துவிடும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அச்சப்படுவதாக பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

நாடெங்கிலும் 50 கோடி மக்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை உறுதி செய்யும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் தொடங்கியது.

இதில், இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.

தெலுங்கானா, கேரளம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் அத்திட்டத்தில் இணைய மறுத்துவிட்டன. தங்களது மாநிலங்களில் பிரத்யேக மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வருவதாக அந்த மாநிலங்களின் அரசுகள் தெரிவித்திருந்தன.


இந்தச் சூழலில், தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை டெல்லியில் செயல்படுத்தினால், அதன் மூலமாக ஏராளமான மக்கள் பயன் பெறுவார்கள் என்றும், அதன் காரணமாக மோடியின் புகழ் அதிகரித்துவிடும் என்று கெஜ்ரிவாலுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

டெல்லி அரசு செயல்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதய நோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசின் நலத்திட்டங்களை நிராகரிக்கும் கெஜ்ரிவாலுக்கு, அடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமித் ஷா இவ்வாறு பேசினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close