வில்லங்கத்துக்கு விலைபேசும் மோகன் சி லாசரஸ்!

  தர்மா   | Last Modified : 04 Oct, 2018 04:40 pm

mohan-c-lazarus-explanation-about-his-controversial-video

மோகன் சி லாசரஸின் பேச்சு - அன்றும், இன்றும்

ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட கிறிஸ்தவ மதத் தலைவர் மோகன் சி லாசரஸ், தாம் அவ்விதமாகப் பேசவில்லை எனவும் கிறிஸ்துவும், பைபிளும் அவ்வாறு கூறியிருப்பதையே,  தாம் வெளியிட்டுள்ளதாகவும் தற்போது புதிதாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆனால், இவர் ஏற்கனவே பேசிய வீடியோவை பார்த்தவர்கள், அவரது விளக்கம் எத்தனை பொய்யானது என்பதை புரிந்துகொள்வார்கள். லாசரஸின் மொழியில் சொல்வதனால், விளங்கிக்கொள்வார்கள் என்று குறிப்பிடலாம்.

அதாவது, “இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகம் தான் சாத்தான்களின் அரணாக இருக்கிறது. இங்குதான் பெரிய, பெரிய கோபுரங்களும், கோவில்களும் அமைந்திருக்கின்றன. வட இந்தியாவில் கூட இவ்வளவு கோவில்கள் இல்லை’’ என்று லாசரஸ் கூறியிருந்தார்.

லாசரஸ் பேசியதாக முதலில் வெளியான வீடியோவில், ஹிந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சு மிக தெளிவாக இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, ஆன்மிகத்தலமாக பார்க்கப்படும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களையும் சாத்தான்களின் அரண் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார்.

லாசரஸின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ வாட்ஸ் அஃப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில்  வேகமாகப் பரவியது. சேலம், கோவை, பொள்ளாச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  உள்ளிட்ட ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், தனது பேச்சு குறித்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை லாசரஸ் வெளியிட்டுள்ளார். அது தனது பேச்சுக்களுக்கு அர்த்தமற்ற ஓர் விளக்கத்தை கொடுத்து பொதுமக்களின் பகுத்தறிவை கேலிக்குள்ளாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தனது பேச்சை ஊடகங்களும், பத்திரிகைகளும் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளன என்பது அவரது முதல் குற்றச்சாட்டு. தமக்கு எதிராக சில இயக்கங்கள் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளன என்பது அவரது குற்றச்சாட்டு.

ஆனால், இறுதிவரை தான் பேசியது தவறு என்று லாசரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, வேதப்புத்தகத்தையும், இந்திய மக்களின் நம்பிக்கையையும் ஒப்பிட்டு, அந்தப் புத்தகத்தில் சொல்லியிருந்தபடியே தான் பேசியதாக சொல்கிறார் லாசரஸ்.

அப்படியானால், மாற்று மதத்தவர்களின் நம்பிக்கையை  அல்லது அவர்களது தெய்வத்தை சாத்தான் எனக் குறிப்பிடுவதைத்தான் வேதப்புத்தகம் கற்றுத்தந்ததாக லாசரஸ் சொல்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

அடுத்ததாக, சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ ஊழியர்களின் கூட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதுதான் அந்த வீடியோ என்றும், எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் தான் அப்படிப் பேசவில்லை என்றும் லாசரஸ் கூறுகிறார்.

மூடப்பட்ட அரங்குக்குள்ளாக எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் அதுகுறித்து யாரும் கண்டுகொள்ளக்கூடாது என்பதே அவரது வாதமாக தற்போது வெளியிடப்பட்ட வீடியோவில் கூறப்பட்டுள்ள வாதமாக உள்ளது.

அதுமட்டுமின்றி, தனக்கு வேண்டப்பட்ட நபர்களை அழைத்து, நான்கு சுவர்களுக்குள் அமர்த்தி உட்காரவைத்து கொண்டு பேசக்கூடிய வில்லங்கமான எதுவும், கிறிஸ்து மற்றும் பைபிளின் பெயரால் பேசப்பட்டது எனும்போது, அத்தகைய பேச்சுகள் எந்தவொரு மதத்தையும் புண்படுத்திப் பேசுவது மற்றும் சட்ட விரோதமாகாது என்பதே எவருக்கும் புரிந்திடாத தர்க்கமாக லாசரஸ் முன்வைத்துள்ளார்.

அதே சமயம், தனது பேச்சு ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் லாசரஸ். லாசரஸின் இந்த வருத்தம் உண்மையானதுதானா, அல்லது தன் மீது 17-க்கும் மேற்பட்ட ஊர்களில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை எண்ணி, அச்சத்தில் பொய்யானதொரு வருத்தம் தெரிவிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால், லாசரஸின் மழுப்பல்களை கருத்தில் கொள்ளாமல், காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதே, எதிர்காலத்தில் எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவரும், பிற மதத்தை கொச்சைப்படுத்திப் பேசாமல் இருப்பதற்கான எச்சரிக்கையாக அமையும்.

தனது பேச்சின் இறுதிப்பகுதியில், சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் தனக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஆண்டவர் மன்னிக்க வேண்டும் என்கிறார் லாசரஸ். முதலில் ஆண்டவர் அவரை மன்னிக்க வேண்டும் என்பதே அனைத்து மதங்களையும் நேசிக்கக் கூடியவர்களின் எண்ணம்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.