5 மாநில தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  பாரதி கவி   | Last Modified : 07 Oct, 2018 09:12 am

no-alliance-with-congress-in-5-states-election-cpim

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதே சமயம், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்த வியூகம், ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர்  மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளன. 

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று தொடங்கி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.), ராஷ்ட்ரீய லோக் தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் தேர்தலை சந்திப்பது என மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது. இந்தக் கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதேபோன்று தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து வருகிறது. 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது என்றாலும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி வைக்க அக்கட்சி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close