தேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்!

  பாரதி கவி   | Last Modified : 11 Oct, 2018 10:46 am

rahul-gandhi-s-temple-run-visits-for-elections

நவீன தொடுதிரை செல்போன்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலான மக்களுக்கு “டெம்பிள் ரன்’’ விளையாட்டு குறித்து நன்றாகவே தெரிந்திருக்கும். சிலர் அதற்கு அடிமையாகிவிடுவதும் உண்டு. ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் “டெம்பிள் ரன்’’ வேறு மாதிரியாக இருக்கிறது. ஆம், தேர்தல்களின்போது அவர் கோயில்களுக்கு படையெடுப்பதைத்தான் ஆங்கில செய்தி மீடியாக்கள் இப்படி வர்ணிக்கின்றன.

அரசியல் தலைவர்கள் தேர்தலின்போது வழிபாட்டு தலங்களுக்குச் செல்வது வழக்கமான ஒன்றுதான் என்ற போதிலும், தேர்தல் நடைபெறும் சமயங்களில் மட்டும் பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வழிபடுவதான புகைப்படங்களுக்கு காட்சி தரும் பாணியை ராகுல் காந்தி கையாண்டு வருகிறார். இதற்கு முன்பு, குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது டெம்பிள் ரன் உத்தியை அவர் கையாண்டார். அதற்கு முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும், ஓரளவு பலன் கிடைத்தது. 

அதேபோன்று தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் கோயில்களில் வழிபாடு நடத்திவருகிறார் ராகுல் காந்தி. கடந்த மாதம் 17-ஆம் தேதி அவர் இங்கு பிரசாரத்தை தொடங்கியபோது, பூசாரிகளைக் கொண்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டன.

அதன் பிறகு கடந்த 6-ஆம் தேதி ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தின் சித்திரகூட் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள “காம்நாதர்’’ கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர், நர்மதை நதிக்கும் அவர் வணக்கம் செலுத்தினார். இதையடுத்து, வரும் 15-ஆம் தேதி குவாலியர் செல்லும் ராகுல் காந்தி, அப்பகுதியில் பிரசித்தி பெற்ற பெண் தெய்வமான ‘’பிதம்பரா’’ பீடத்தில் வழிபாடு நடத்தவுள்ளார்.

இந்திய-சீன போர், கார்கில் போன்ற முக்கிய தருணங்களில் இந்தியா வெற்றி பெற இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதாகவும், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு வழிபாடு நடத்தியிருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது.

இதேபோன்று, உஜ்ஜைனியில் உள்ள மஹாகால் கோயிலிலும் ராகுல் காந்தி வரும் 25-ஆம் தேதியன்று வழிபாடு நடத்தவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close