பெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை! 

  சுஜாதா   | Last Modified : 16 Oct, 2018 06:19 am
pm-s-meeting-with-global-oil-and-gas-experts-ceos

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் அயல் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும்  எரிவாயுத் துறையிலுள்ள  தலைமை நிர்வாக அதிகாரிகள், நிபுணர்களுடன்  உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. பணவீக்கம் உயருகிறது. இவ்விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவை.

வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் வினியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகிறது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அமைச்சர்கள், சவூதி அரேம்கோ, அட்நாக், பி.பி., ராஸ்நெப்ட், ஐ எச் எஸ் மர்கிட், பயணியர் நேச்சுரல் ரிசோர்சஸ் கம்பெனி, எமர்சன் எலக்ட்ரிக் கம்பெனி, டெல்லூரியன் முபதலா முதலீட்டு நிறுவனம், சுலம்பர்கர் லிமிடெட், வுட் மெக்கன்சி, உலக வங்கி, சர்வதேச எரிசக்தி முகமை, என்.ஐ.பி.எஃப்.பி, புருக்கிங்ஸ் இந்தியா மற்றும் பல்வேறு இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close