ராகுல் தலைமையில் பாஜக-வுக்கு எதிரான கூட்டணி!- குமாராசாமி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 06:46 pm
rahul-gandhi-should-lead-2019-alliance-hd-kumaraswamy-after-bypoll-win

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமைப்போகும் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில், ஷிமோகா, மாண்டியா, பெல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமாகாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 

இதில் இரண்டு தொகுதிகளில் காங்கிரஸூம், இரண்டு தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம், ஒரு தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ம.ஜ.த வேட்பாளர் ஷிவராமகவுடா, பா.ஜ.க வேட்பாளரை விட 3,24,943 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா வெற்றி பெற்றுள்ளார். இவர், பா.ஜ.க வேட்பாளர் சாந்தாவைவிட 2,43,161 வாக்குகள் அதிகம் பெற்று பா.ஜ.கவின் கோட்டையை கைப்பற்றியுள்ளார். 

ஷிமோகா மக்களவை தொகுதியில் ம.ஜ.த வேட்பாளர் மதுபங்காரப்பாவை விட 52,148 வாக்கு கூடுதலாக பெற்று பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா வெற்றி பெற்றுள்ளார்.  அதே போல, ராம்நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மஜத வேட்பாளர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றுள்ளார். இவர் பா.ஜ.க வேட்பாளர் சந்திரசேகரை 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

இந்த நிலையில் தேர்தல் வெற்றிக் குறித்து பேசிய குமாரசாமி, ''அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ராகுல் காந்தி தலைமை வகிக்க வேண்டும். பாஜக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் போதெல்லாம், அந்தக் கட்சி படுதோல்வியைத் தான் சந்தித்துள்ளது. இது முன்னர் உத்தர பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. தற்போது கர்நாடகவிலும் நடந்துள்ளது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் புள்ளியாக இருக்கவில்லை. அவரால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து மக்கள் ஏற்கெனவே பார்த்து விட்டனர். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். மக்களின் ஆதரவு அந்தக் கூட்டணிக்குத் தான் இருக்கும்'' என்று கருத்து தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க மற்ற கட்சிகளின் தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டதற்கு, குமாரசாமி, ‘அது அந்தந்த கட்சியின் தலைவரைப் பொறுத்தது. ராகுல் காந்தியுடன் கடந்த சில மாதங்களாக நான் உரையாடியதை வைத்து சொல்கிறேன், அவர் நாணயமானவர். என்னைப் பொறுத்தவரை பாஜக-வுக்கு எதிராக அமையும் கூட்டணிக்கு அவர் தான் தலைமை வகிக்க வேண்டும். அவருக்கு காங்கிரஸ் கட்சி முழு சுதந்திரம் அளித்துள்ளது.  கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, நாங்கள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவு அளித்தது. இப்போது காங்கிரஸுக்கு நாங்கள் அதரவளிக்க வேண்டும்'' என்றுக் கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close