பீகார் - பா.ஜ.க. கூட்டணிக்குள் அதிகரிக்கும் குழப்பம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 10:53 am
bihar-seat-sharing-mathematics-in-nda-alliance

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் தொகுதிகளை பிரித்துக்  கொள்வது தொடர்பாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும், உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும் இடம்பெற்றிருந்ததன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. 22 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஸ்வான் கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலும், குஷ்வாஹா கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து அவர்கள் இருவரும் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்று அப்பதவியில் நீடித்து வருகின்றனர்.

பீகாரில் தொடர்ந்து ஆளும் கட்சியாகவும், பா.ஜ.க.வின் நீண்ட கால நட்புக் கட்சியாகவும் கருதப்படுகின்ற நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடந்த முறை அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அதே கட்சி தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துவிட்டது. இதையடுத்து, நிதீஷ் கட்சிக்கு கௌரவமிக்க இடங்களை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க. ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவும், நிதீஷ் குமாரும் அண்மையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 தொகுதிகள் என மொத்தம் 34 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதமுள்ள 6 இடங்களை பாஸ்வான் கட்சிக்கும், குஷ்வாஹா கட்சிக்கும் பிரித்துக் கொடுப்பது என்று முடிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தக் கணக்கை மற்ற இரு கட்சிகளும் ஏற்க மறுத்துள்ளன. அதாவது, கடந்த முறை போட்டியிட்ட அதே எண்ணிக்கையில் தற்போதும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்துவதாகத் தெரிகிறது.

பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவரும், மாநில அமைச்சருமான பசுபதி பராஸ் இதுகுறித்து கூறுகையில், ’’தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளின் தேசியத் தலைவர்களும் சந்தித்துப் பேசும் வரையில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முழுமை அடையாது. தற்போது ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் வெறும் ஊகங்கள்தான். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் 7 தொகுதிகளிலாவது போட்டியிட நினைக்கிறோம். கடந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு தொகுதியில் வெறும் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுப் போனோம். அந்தத் தேர்தலுக்கு பிறகு எங்களது செல்வாக்கு இதுவரை குறைந்துவிடவில்லை. அப்படியிருக்கையில், எங்களுக்கான ஒதுக்கீட்டை நாங்கள் ஏன் பெற முடியாது?’’ என்றார்.

இதேபோன்று குஷ்வாஹின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும், தற்போதைய தொகுதிப் பங்கீட்டு புரிந்துணர்வை ஏற்க மறுத்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட 3 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற்றுக் கொள்ளும் கேள்விக்கே இடமில்லை என்கிறார் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மாதவ் ஆனந்த். தங்களுடைய நிலைப்பாடு குறித்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

முன்னதாக, அமித் ஷாவும், நிதீஷ் குமாரும் சந்தித்துப் பேசிய அதே வேளையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தினுடைய மகனுமான தேஜஸ்வி யாதவை, உபேந்திர குஷ்வாஹா சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு எதார்த்தமானது என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு விருப்பமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை எனில், குஷ்வாஹா கட்சி அணி மாறக் கூடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இப்படியொரு சூழலில், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் திருப்தி செய்கின்ற வகையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close