சத்தீஸ்கர் - தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு பெறுகிறது

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 02:02 pm
chattisgarh-first-phase-poll-campaign-to-end-today

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் நடைபெறவுள்ள முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறவுள்ளது. முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. இதில், நக்ஸல் அச்சுறுத்தல் நிறைந்த, 12 மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.

இங்கு பா.ஜ.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து வரும் ரமண் சிங், மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். நான்காவது முறையாகவும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பா.ஜ.க.வின் எண்ணம். அதே சமயம், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறையாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். ஆக, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான மூன்றாவது அணியாக அஜீத் ஜோகியின் கூட்டணி பார்க்கப்படுகிறது.

முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 18 தொகுதிகளில் மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, 1,101 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 49 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. பகுஜன் சமாஜ் வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகள் அனைத்தும் நக்ஸல்களின் அச்சுறுத்தல் நிறைந்தவை என்பதால் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close