பா.ஜ.க. முஸ்லிம் தலைவர்களின் பெயர்களை மாற்ற முடியுமா?- உத்தரப் பிரதேச அமைச்சர் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 12:40 pm
bjp-muslim-leaders-should-be-renamed-up-minister

முகலாய மன்னர்களால் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை பா.ஜ.க. அரசு மீண்டும் பழைய பெயருக்கே மாற்றி வருவதைப் போல, அக்கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களின் பெயரை மாற்ற முடியுமா? என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஓ.பி.ராஜ்பார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓ.பி.ராஜ்பார், மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவராவார். கூட்டணியிலும், அமைச்சரவையிலும் இருந்துகொண்டே, உத்தரப் பிரதேச அரசின் முடிவுகளை அவர் விமர்சித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. அலஹாபாத் நகரின் பெயரை பிரக்யாராஜ் என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தியா மாவட்டம் என்றும், முகுல்சராய் ரயில் நிலையத்தை தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையம் என்றும் உத்தரப் பிரதேச அரசு பெயர் மாற்றம் செய்தது. முகலாய மன்னர்களால் மாற்றியமைக்கப்பட்ட வேறு சில ஊர்களின் பெயர்களையும் அவற்றின் உண்மையான பெயர்களைக் மறுபடியும் சூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓ.பி.ராஜ்பார் இன்று இதுகுறித்து கூறுகையில், “முகுல்சராய், பைசாபாத் ஆகியவற்றின் பெயர்களை பா.ஜ.க. மாற்றியுள்ளது. அவை முகலாயர்களால் மாற்றியமைக்கப்பட்ட பெயர்கள் என்று அக்கட்சி தெரிவிக்கிறது. அதே பா.ஜ.க.வில் ஷா நவாஸ் உசேன் என்ற செய்தித்தொடர்பாளரும், முக்தர் அப்பாஸ் நக்வி என்ற மத்திய அமைச்சரும், மொஹ்சின் ராசா என்ற மாநில அமைச்சரும் இருக்கின்றனர். முதலில் இவர்களது பெயரைத்தான் மாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் எப்போதெல்லாம் தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறார்களோ அப்போதெல்லாம் இதுபோன்று நாடகம் நடத்தப்படுகிறது. முஸ்லிம்கள் நமக்கு அளித்துச் சென்ற பொருள்களை யாரும் தூக்கியெறியவில்லை. செங்கோட்டையை கட்டியது யார்?, தாஜ் மஹாலை கட்டியது யார்?’’ என்றார் அவர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close