தேர்தல் அறிக்கையை பத்திரத்தில் வெளியிட்ட முன்னாள் முதல்வர்!

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 09:41 am
ajith-jogi-released-election-manifesto-in-stamp-paper

தேர்தல் அறிக்கை என்றாலே சுமார் 100, 200 பக்கங்களுடன் புத்தகம் போல வெளியிடுவதுதான் அரசியல் கட்சிகளின் வழக்கம். ஆனால், ரத்தினச் சுருக்கமாக வெறும் 14 வாக்குறுதிகளை, அதுவும் பத்திரத்தில் எழுதி வெளியிட்டு அசத்தியிருக்கிறார் அரசியல் தலைவர் ஒருவர்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைத்தான் அக்கட்சியின்  தலைவரும், முன்னாள் முதல்வருமான அஜீத் ஜோகி இதுபோன்று வெளியிட்டிருக்கிறார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய அஜீத் ஜோகி, தற்போது புதிய கட்சியை தொடங்கி தேர்தல் களத்தில் குதித்துள்ளார். இவரது கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவினாலும், அஜீத் ஜோகியின் கூட்டணி மூன்றாவது அணியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவரது கூட்டணியின் தாக்கம் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கே சொல்லியிருக்கிறார்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2,500க உயர்த்துவது, விவசாயத்துக்கான மின்சார விநியோகத்தை 5 குதிரைத்திறன் அளவுக்கு அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அஜீத் ஜோகி உறுதியளித்திருக்கிறார். மாநிலத்தில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு வேலையின்றி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,001, இளங்கலை வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,501 மற்றும் முதுகலை வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2001 என்ற அளவில் உதவித்தொகை வழங்கப்படும் என்கிறார் அஜீத் ஜோகி.

சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்கள் வாழும் இடங்களை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும், புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயர்களுடன் மாவட்ட ஆட்சியர்களை இணைத்து கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் ரூ.1 லட்சம் செலுத்தி அத்தொகையை குழந்தையின் 18வது வயதில் வட்டியுடன் பெற்றுக் கொள்ள நடவடிக்கை, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று மாவட்டந்தோறும் அதிநவீன மருத்துவமனைகள் அமைப்பது போன்ற வாக்குறுதிகளையும் அஜீத் ஜோகி அளித்திருக்கிறார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close