பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள் - நவ.22ல் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 10:11 am
opposition-parties-to-meet-on-nov-22-to-discuss-alliance

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அந்த வகையில், ஓரணியில் இணைய விரும்பும் அக்கட்சிகளின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில், வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. 

குறிப்பாக, காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், ஆந்திர மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை பல்வேறு சமயங்களில் சந்தித்துப் பேசி சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டினார். அதேபோல், மேற்கு வங்க முதல்வரை அவர் 19 அல்லது 20ம் தேதியில் சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டுடன், சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்தை 22ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கௌடா, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close