எல்லாக் கடனையும் அடைச்சிடுறேன் - மீண்டும் கதறும் மல்லையா!

  Newstm Desk   | Last Modified : 05 Dec, 2018 11:48 am
mallaya-offer-to-repay-all-loans-to-banks

வங்கிகளில் தனக்கு இருக்கும் அனைத்து கடனையும் அடைக்கத் தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். இந்த முறை “தயவுசெய்து எடுத்துக் கொள்ளவும்’’ என்ற கெஞ்சலான தொனியில் அவர் பேசியிருக்கிறார்.

மல்லையா மற்றும் அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.8,000 கோடி அளவுக்கு கடன் பெறப்பட்டது. ஆனால்,அந்தக் கடனை அவர் வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்கும் நோக்கில், லண்டனுக்கு அவர் தப்பியோடினார். மல்லையாவை இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் மூலமாக அறிவிக்கச் செய்து, அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில், தமது கடனை அடைக்க தயாராக உள்ளதாக மல்லையா ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது மீண்டும் அதை தெரிவித்துள்ளார்.

இன்று காலையில், மல்லையா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய மோசடியாளராக என்னை அடையாளப்படுத்துவதில் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் குறியாக உள்ளனர். அவை எல்லாம் பொய்யானவை. எனது கடனை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான் தெரிவித்ததை ஏன் யாரும் உரக்கச் சொல்ல மறுக்கிறார்கள்?

கச்சா எண்ணெய் விலை உயர் காரணமாக கிங்பிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியது. வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பணமெல்லாம் அந்த நஷ்டத்தில் போய்விட்டது. இருப்பினும், வங்கியில் நான் பெற்ற கடனுக்கான அசலை 100 சதவீதம் திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன். தயவுசெய்து அதை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மல்லையாவின் கடன் வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.9,990 கோடியாக உள்ளது. ஆனால், அவர் அசலை மட்டும் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close