நாடு வளர்த்தெடுத்துள்ள ‘புற்றுநோய்’ பா.ஜ.க. கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியை தோற்கடிக்காவிட்டால் நாட்டையே அழித்துவிடும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விதர்பா பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், அமராவதி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அசோக் சவாண் பேசியதாவது:
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக மாநில பா.ஜ.க. அரசு அறிவித்து ஓராண்டு ஆகிறது. ஆனால், விவசாயிகள் அதன் மூலம் இதுவரை பயனடையவில்லை. பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி அரசின் தவறான கொள்கைகளால்தான் விவசாயிகள் இந்த அளவுக்கான துயரங்களை சந்தித்துள்ளனர். மக்களிடம் வாக்குகளை கோரும் வகையில் எந்த சாதனையையும் செய்யவில்லை என்பதால் சிவசேனா கட்சி ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
நாடு வளர்த்தெடுத்துள்ள புற்றுநோய் பா.ஜ.க. கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியை நாம் தோற்கடிக்காவிட்டால் ஒட்டுமொத்த நாட்டையே அவர்கள் அழித்துவிடுவார்கள் என்றார் சவாண்.