தேவையென்றால் ஆதார் விபரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 02:52 pm

you-may-soon-be-able-to-withdraw-your-aadhaar-number-but-only-if-you-don-t-have-pan-card

மொபைல் எண், வங்கிக்கணக்கு ஆகியவற்றிக்கு ஆதார் கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, தேவைப்பட்டால் ஆதார் விபரங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், வங்கி கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட சேவைகளைப் பெறவும் அத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறி அதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. 

பின்னர் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, வங்கிக்கணக்கு, மொபைல் இணைப்பு ஆகியவற்றிக்கு ஆதார் எண் தேவையில்லை என்றும் அரசின் நலத்திட்டங்கள் வருமான வரி கணக்கு, பான் எண் ஆகியவற்றிக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் உத்தரவிட்டது. 

இது தொடர்பான சட்டத்திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வங்கிக்கணக்கு, மொபைல் இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட தகவல்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, வழங்கப்பட்ட ஆதார் விவரங்களை ஒருவர் விரும்பினால் திரும்பப் பெறும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டம் விரைவில் வருகிறது.

ஆதார் சட்ட திருத்தத்தில் இதற்கான விதிமுறைகளும் கொடுக்கப்பட உள்ளது. அதாவது ஒரு நிறுவனத்திடம் வழங்கிய ஆதார் எண், தனது ரேகை மற்றும் விழிப்படல பதிவுகள் உள்ளிட்டவற்றை விரும்பினால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தைகளின் கைரேகை மற்றும் ஆதார் தகவல்களைபொறுத்த வரையில் அந்த குழந்தை வளர்ந்து 18 வயது ஆன பிறகு ஆதார் விவரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். 18 வயது நிறைவடைந்த 6 மாதங்களுக்குள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

அதேசமயம் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆதார் சட்ட திருத்தம் பணிகள் முடிவடைந்த பிறகு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமைச்சரவையின் முடிவைப் பொறுத்து இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close